Last Updated : 11 Sep, 2024 10:34 AM

 

Published : 11 Sep 2024 10:34 AM
Last Updated : 11 Sep 2024 10:34 AM

விபத்துகளில் சிக்கியவர்களுக்கு தயக்கமின்றி உதவ ஊக்கப்படுத்தும் சட்டம்: விழிப்புணர்வு ஏற்படுத்த யுஜிசி அறிவுறுத்தல்

பிரதிநித்துவப் படம்.

சென்னை: விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு உதவுபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட “குட் சமாரிட்டன் சட்டம்-2016” குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து யுஜிசி செயலர் மணீஷ் ஆர். ஜோஷி பல்கலை., கல்லூரி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: சாலை விபத்துகளில் மதிப்புமிக்க உயிரை இழக்க நேரிடுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காதது, காவல் துறை, சட்ட நடைமுறைகள் போன்ற காரணங்களால் உதவி செய்யத் தயங்குவது போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டவரை காப்பாற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றத்தால் கடந்த 2016-ம் ஆண்டு "குட் சமாரிட்டன்' சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம், விபத்தில் பலத்த காயமடைந்தவர்களின் உயிர்காக்கவும், அவர்களுக்கு உதவுபவர்களை ஊக்கப்படுத்தவும் உதவும் முக்கியமான சட்டமாகும். இதன்படி விபத்தில் அல்லது மற்ற அசம்பாவிதங்களில் உதவும் குட் சமாரிட்டன்களை விசாரணைகளில் போலீஸ் இணைக்கக்கூடாது. இவர்கள் தங்களது அடையாளத்தை காவல்துறைக்கும், மருத்துவமனைக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை.

இந்த குட் சமாரிட்டன்களுக்கு சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும். முக்கியமாக, மருத்துவமனைகள் அடிபட்டவர்களுக்கு சிகிச்சை மறுக்கக் கூடாது. முதலுதவிக்கு கட்டணமும் பெறக்கூடாது. சாட்சியளிக்க தாமாகவே முன்வராத நிலையில் அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது.

எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைவரும் அச்சமின்றி, மனிதநேயத்துடன் உதவ முன் வர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு குட் சமாரிட்டன் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து அவர்களுக்கு தெளிவான விளக்கங்களை அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x