Published : 10 Sep 2024 05:29 PM
Last Updated : 10 Sep 2024 05:29 PM
கடலூர்: கடலூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைக்குள் மாணவர்கள் காலணிகளை அணிந்து செல்வதற்கு தடை உள்ளதாக மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் மஞ்சகுப்பத்தில் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சுமார் 550 மாணவர்கள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச் செல்வன், மாநகராட்சி ஆணையர் அணு உள்ளிட்டோர் பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து இன்று (செப்.10) ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அனைத்து வகுப்பறைகளிலும் மாணவர்களின் காலணிகள் வகுப்பறையின் வெளியே விடப்பட்டிருந்ததை பார்த்து மேயர் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆசிரியர்கள் மட்டும் காலணிகள் அணிந்து பாடம் நடத்திக் கொண்டிருந்தனர். இதனையடுத்து மேயர் சுந்தரி ராஜா வகுப்பறைக்குச் சென்று மாணவர்களிடம், “ஏன் காலணிகளை வெளியே விட்டுவிட்டு வருகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியதுடன், “காலணிகளை அணிந்து கொண்டுதான் வகுப்பறைக்குள் வர வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
அப்போது பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்களிடம் மேயர் சுந்தரி ராஜா இது குறித்து கேட்டபோது, “அனைத்து மாணவர்களும் காலணி அணிந்து உள்ளே வந்தால் வகுப்பறையில் புழுதி பறக்கும், காலணியில் உள்ள மண் தூசுகள் வகுப்பறைக்குள் குவிந்து விடுவதால் சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது எனவே காலணிகளை வெளியே கழட்டி விட்டுவிட்டு வரச் சொல்கின்றோம்” என்று விளக்கம் அளித்தனர்.
இதனால் அதிருப்தி அடைந்த மேயர், “ஆசிரியர்களைப் போலவே மாணவர்களும் காலணி அணிந்து கொண்டு தான் இனிமேல் வகுப்பறைக்குள் வரவேண்டும்” என்று தெரிவித்தார். அத்துடன், “மாணவர்களின் காலணியை வகுப்பறைக்கு வெளியே விட வைத்து நவீன தீண்டாமையை கடைபிடிக்கிறீர்களா?” என ஆசிரியர்களைப் பார்த்து கேள்வி எழுப்பிய மேயர், “எந்த ரூபத்திலும் மாணவர்கள் மத்தியில் தீண்டாமையை கடைப்பிடிக்கக் கூடாது” என ஆசிரியர்களை எச்சரித்துச் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT