Published : 07 Sep 2024 06:13 AM
Last Updated : 07 Sep 2024 06:13 AM
சென்னை: ஒவ்வொரு மாணவரின் வளர்ச்சியிலும் ஆசிரியர்கள் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும்என்று சென்னையில் நடைபெற்ற ‘அன்பாசிரியர்’விருது வழங்கும் விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தார்.
மாணவர்களுக்கு தனித்துவமிக்க கல்வியை அளிப்பதுடன், மாறுபட்ட சிந்தனையுடன் செயல்பட்டு, பள்ளிக்குப் பெருமை சேர்க்கும் அர்ப்பணிப்புமிக்க அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக். பள்ளிகளின் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் சேர்ந்து ‘அன்பாசிரியர்’ விருதை 2020 முதல் வழங்கி வருகிறது.
தொடர்ந்து 4-வது முறையாக இந்த ஆண்டுக்கான ‘அன்பாசிரியர்’ விருதுக்கு தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 148 பேர்நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இணைய வழியில் நேர்காணல் நடத்தப்பட்டு, 39 பேரை அன்பாசிரியர் விருதுக்கும், 2 பேரை முன்மாதிரி அன்பாசிரியர் விருதுக்கும் மூத்த கல்வியாளர்கள், பேராசிரியர்கள் அடங்கிய தேர்வுக்குழுவினர் தேர்வு செய்தனர்.
இவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று விமரிசையாக நடைபெற்றது. ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன் வரவேற்றுப் பேசியதாவது: காலத்தின் மாற்றத்தையும், மாணவர்களுக்கான தேவைகளையும் உணர்ந்து பள்ளிக்கல்வித் துறை செயல்பட்டு வருகிறது. அதேநேரம், கல்வித் துறையில் பல்வேறு செயல்பாடுகள் தேவையின்றி அரசியலாக்கப்படுவது வருத்தத்துக்குரியது. அது துறை அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் பெரும் அழுத்தமாக மாறுகிறது.
காவல் துறையும், கல்வித் துறையும் எப்போதும் அழுத்தம் நிறைந்ததாகவே இருக்கும். ஒரு நிகழ்வில் ஆழ்ந்து சென்று கவனிக்காமல், மேலோட்டமான தகவல்கள் மட்டுமே பரவலாக செய்தியாக்கப்படுகின்றன. இதனால் பெரும்பாலும் குற்றமற்றவர்களே பாதிக்கப்படுகின்றனர். அத்தகைய நிகழ்வுகளை ‘இந்து தமிழ் திசை’ ஊக்குவிப்பதில்லை. கல்வித் துறையில் நடைபெற்று வரும் செயல்பாடுகளின் பின்னணி தெரியாமல் அனைத்தையும் பரபரப்பாக்கும் இந்த யுகத்தில், நாங்கள் துறையின் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருந்து வருகிறோம். கல்வித் துறையில்ஆக்கப்பூர்வமான விஷயங்களை மேலும்வளர்த்தெடுப்பதற்காக என்றும் உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் பேசியதாவது: ‘இந்து தமிழ் திசை' நாளிதழுடன் இணைந்து அன்பாசிரியர் விருது நிகழ்வை முன்னெடுத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியவத்தும் வாய்ந்தது. நான் 7-வது வகுப்பு படிக்கும் வரை சராசரிமாணவனாக இருந்தேன். அப்போது பள்ளிக்குவந்த ஆசிரியர் நாராயணசாமி, எனக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். அவரின் ஊக்குவிப்பால்தான் நன்றாகப் படித்து முன்னேறினேன். அதுபோலவே, அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு வழிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 41 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ஆண்டுதோறும் அன்பாசிரியர் விருது வழங்கி வருவது பாராட்டுக்குரியது. இந்த நிகழ்வை குடும்ப விழாவாகவே கருதுகிறேன். அன்பாசிரியர் விருதுபெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் நல்வாழ்த்துகள். இந்த விழா தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். தமிழக பள்ளிக்கல்வித் துறையில் முதல்வர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். ஆனால், அந்த திட்டங்களை எல்லாம்வெற்றித் திட்டங்களாக மாற்ற ஆசிரியர்களால்தான் முடியும். பள்ளியையே தங்கள் வீடாக கருதி பணியாற்றி வருபவர்கள் ஆசிரியர்கள்.
ஒவ்வொரு மாணவரின் வளர்ச்சியிலும் ஆசிரியர்கள் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும்.வகுப்பில் ஏதேனும் ஒரு மாணவர் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தால், அவரிடம்பேசி குடும்பப் பின்னணியையும், பிரச்சினைகளையும் ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பெற்றோரை அழைத்துப் பேசி, அவர்கள் இயல்பாக இருப்பதற்கான சூழல்களை உருவாக்கித் தர வேண்டும். அனைத்துத் துறைகளிலும் சிறந்தது பள்ளிக்கல்வித் துறை தான். ஏனெனில், மற்ற துறைகளுக் குத் தேவையான சிறந்த மனித வளத்தை பள்ளிக்கல்வித் துறைதான் உருவாக்கித் தருகிறது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை சிறப்பாகச் செயல்படுவதால்தான் உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கை 53 சதவீதமாக உயர்ந்துள்ளது. முதல்வரின் `நான் முதல்வன்' திட்டம்மாணவர்களை மேற்படிப்பு படிக்க வைப்பதுடன், அவர்கள் நல்ல வேலைக்கு செல்லவும் உறுதுணையாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், வர்த்தமானன் பதிப்பக உரிமையாளர் ஸ்ரீ.வர்த்தமானன், பொன்வண்டு டிடர்ஜென்ட் நிறுவனத்தின் பைனான்ஸ் மேனே ஜர் முருகன், ‘இந்து தமிழ் திசை’ தலைமை செயல் அதிகாரி சங்கர் வி.சுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவை ‘இந்து தமிழ் திசை’ முதன்மை உதவி ஆசிரியர் ம.சுசித்ரா, முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழாவின் பங்குதாரராக டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா செயல்பட்டது. லெட்சுமி செராமிக்ஸ், வர்த்தமானன் பதிப்பகம்,பொன்வண்டு டிடர்ஜென்ட் நிறுவனம், சுராஸ் ஸ்கூல் கைடு ஆகியவை இணைந்து நடத்தின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT