Published : 04 Sep 2024 12:41 PM
Last Updated : 04 Sep 2024 12:41 PM

செங்கல்பட்டு: டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 11 ஆசிரியர்கள் தேர்வு 

ஆசிரியர்கள் பா.செந்தில்குமார், த.நக்கீரன்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற 11 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள், ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சிறப்பாக சேவைசெய்த ஆசிரியர்களுக்கு மாநில அரசு விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. அவ்வாறு விருது பெறுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும், ரூ.2,500 மதிப்பிலான வெள்ளிப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் 11 ஆசிரியர்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுபெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய பேரமனூர் உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பி.கொம்பையா, கோவளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் த.நக்கீரன், செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சு.கீதாகுமாரி, திருக்கழுக்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பா.செந்தில்குமார் ஆகியோர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் தனியார் பள்ளி ஆசிரியர் விருதுக்கு கீரப்பாக்கம் பிளசிங் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் தா.சோபியா ரேச்சில் மேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு அறிஞர் அண்ணா உயர் நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் (சமூக நல பாதுக்காப்பு துறை ஆசிரியர்) சுரேஷ் ராஜ், மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளி சிறப்பு ஆசிரியர் (ஓவியம்) பா.பாண்டியராஜன் ( மாற்றுத்திறனாளி ஆசிரியர்) ஆகியோரும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய பள்ளிகள்: இதேபோல் சித்தாமூர் ஒன்றிய போரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ. கலைகேசவன், ஊனைமாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் டே. ரோசன்னா செல்வகுமாரி, திருப்போரூர் ஒன்றியம் ஆலத்தூர் அரசு ஆதிதிராவிட நலத்துறை நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர் ஜே. ஃபியூலாதங்கம், புனித தோமையார் மலை ஒன்றியம் சேலையூர், தாம்பரம் நகராட்சி தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் கி.சுதா ஆகியோரும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக முழுவதும் 386 ஆசிரியர்களுக்கு நாளை வண்டலூரில் நடைபெறும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ, எம்பி-க்கள், கல்விதுறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x