Published : 04 Sep 2024 11:07 AM
Last Updated : 04 Sep 2024 11:07 AM
சென்னை: அரசுப் பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அதற்கான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தச் செய்யும் வகையில் கடந்த ஆக.22-ம் தேதி முதல் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பேச்சு, கவிதை, மணல் சிற்பம், மாறுவேடம், ஓவியம் வரைதல், நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் போட்டிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளை வீடியோ எடுக்க வேண்டும். எமிஸ் தளத்தில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களின் வீடியோக்களை மட்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும். போட்டிகள் நடைபெறும் வகுப்பறைகளில் பள்ளியின் பெயர், மாவட்டம், போட்டியின் தலைப்பு, வகுப்பு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும். இந்த விவரங்கள் வீடியோவில் பின்புலத்தில் காணப்பட வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் எமிஸ் எண், போட்டியின் பெயர் விவரம் அடங்கிய அடையாள அட்டை அணிந்திருத்தல் வேண்டும். மாணவர் படைப்புகளை எடிட் செய்து பதிவேற்றம் செய்தல் கூடாது. 90 மற்றும் 60 நிமிடம் போட்டிகளை மட்டும் செயல்பாட்டின் தொடக்கம், இடையில், முடிவில் என்ற வகையில் ஐந்து நிமிஷங்கள் இருக்குமாறு வீடியோ எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT