Published : 04 Sep 2024 09:40 AM
Last Updated : 04 Sep 2024 09:40 AM

கரூர் மாவட்டத்தில் 9 பேர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு

கரூர்: கரூர் மாவட்டத்தில் 9 பேர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

செப். 5 ஆசிரியர் தினத்தையொட்டி ஆண்டுதோறும் மாநில அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. தொடக்க, உயர்நிலை, தனியார், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி, மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்தியன், சமூக பாதுகாப்பு என 7 பிரிவுகளின் கீழ் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி முதல்வர்கள், ஆராய்ச்சி, பயிற்சி நிலைய விரிவுரையாளர்கள் உள்ளிட்ட 385 பேர் 2024ம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

விருது வழங்கும் விழா நாளை (செப். 5ம் தேதி) சென்னை வண்டலூரில் உள்ள பி.எஸ்.அப்துல்ரகுமான் கிரசண்ட் பல்கலைக் கழக அரங்கில் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி விருதுகளை வழங்குகிறார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

2024ம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு கரூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்விப் பிரிவில் கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் சிவாயம் (மேற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ம.ரமேஷ், தாந்தோணி ஒன்றியம் வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் சு.மனோகர், அரவக்குறிச்சி ஒன்றியம் ஈசநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஆ.ச.சம்சாத்பானு ஆகிய 3 தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிப் பிரிவில் கரூர் பெரியகுளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரெ.முரளி, பாலவிடுதி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பெ.கணேசன், மாயனூர் அரசு மாதிரிப் பள்ளி தலைமை ஆசிரியர் சி.விஜயலட்சுமி ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் பள்ளி பிரிவில் சின்னதாராபுரம் ஆர்.என்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ரா.ராமசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பிரிவில் மாயனூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் க.ரமணி, ஆ.சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 9 பேருக்கும் சென்னையில் நாளை (செப். 5ம் தேதி) நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x