Published : 03 Sep 2024 11:14 PM
Last Updated : 03 Sep 2024 11:14 PM
சென்னை: கல்வி உதவித் தொகைக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வு அக்டோபர் 19-ம் தேதி நடைபெறும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு 2022-ம் ஆண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை தரப்படும். இதில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.
அதன்படி நடப்பாண்டுக்கான திறனாய்வுத் தேர்வு அக்டோபர் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற தேர்வுத்துறை இணையதளத்தில் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த படிவங்களை செப்டம்பர் 5 முதல் 19-ம் தேதிக்குள் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50 செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்கான வினாத்தாள் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும். இதுசார்ந்த கூடுதல் விவரங்களை பள்ளி தலைமையாசிரியர்களிடம் கேட்டுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT