Published : 02 Sep 2024 07:29 AM
Last Updated : 02 Sep 2024 07:29 AM
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றது. இணையதளத்தில் இருந்து இடஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்தபிறகு வரும் 5-ம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டும்.
தமிழகத்தில் அரசு, தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ்இடங்களுக்கான பொது கலந்தாய்வு https://tnmedicalselection.net என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் கடந்த ஆகஸ்ட் 21-ம்தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. அரசு ஒதுக்கீட்டு தரவரிசைபட்டியலில் உள்ள 28,819 பேர், நிர்வாக ஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் உள்ள 13,417 பேர் ஆன்லைனில் பதிவு செய்து கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்வது ஆகஸ்ட் 27-ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. 28-ம் தேதி தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. தற்காலிக ஒதுக்கீடு விவரங்கள் 29-ம் தேதி வெளியிடப்பட்டன.
இதற்கிடையே, கன்னியாகுமரி மெடிக்கல் மிஷன் ஆராய்ச்சி மைய மருத்துவ கல்லூரி வளாக நிலம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதால், அந்த கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட 100 எம்பிபிஎஸ் இடங்களை நிறுத்தி வைப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் 30-ம்தேதி தெரிவித்தது. முன்னதாக அந்த கல்லூரியில் தற்காலிக ஒதுக்கீட்டில் 95 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இடங்கள் திரும்ப பெற்று, வேறு கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதேபோல, அந்த கல்லூரியில் 7.5சதவீத உள் ஒதுக்கீட்டில் ஆணைபெற்ற 5 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வேறு கல்லூரிகளில் இடங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, திருத்தப்பட்ட புதிய இறுதி ஒதுக்கீடு விவரங்கள் 30-ம் தேதி இரவு வெளியிடப்பட்டு, ஒதுக்கீட்டு ஆணைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
செப்டம்பர் 5-ம் தேதி நண்பகல் 12 மணி வரை ஒதுக்கீட்டு ஆணையை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அன்று மாலை 5 மணிக்குள் ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டும் என்று மருத்துவ கல்வி, ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
விரைவில் 2-ம் கட்ட கலந்தாய்வு: முன்னதாக, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு இடங்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 22-ம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேரடியாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. காலியாக உள்ள இடங்களுக்கு விரைவில் 2-ம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT