Published : 28 Aug 2024 06:45 PM
Last Updated : 28 Aug 2024 06:45 PM
சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகமும், ரோபரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகமும் இணைந்து உத்திசார் கூட்டாண்மையை மேற்கொண்டுள்ளன. இதன்மூலம் சென்னை ஐஐடி-ல் பிஎஸ் பட்டப்படிப்பு (தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள்) மாணவர்கள் ஐஐடி ரோபரில் எம்எஸ் நேரடிப் படிப்பில் சேர்ந்து படிப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஐஐடி ரோபரில் படிக்கவுள்ள மாணவர்கள் சென்னை ஐஐடி பிஎஸ் பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கான ‘கிரடிட்’களுக்கும் இந்த கூட்டாண்மை உதவிகரமாக இருக்கும். இந்த ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, ஐஐடி ரோபர் இயக்குநர் பேராசிரியர் ராஜீவ் அஹுஜா ஆகியோர் இன்று (28 ஆகஸ்ட் 2024) கையெழுத்திட்டனர்.
ஐஐடி ரோபர் டீன் (ஆர்&டி) பேராசிரியர் புஷ்பேந்திர பி.சிங், ஐஐடி ரோபர் கணினி அறிவியல் - பொறியியல் துறைத் தலைவர் பேராசிரியர் சுதர்சன் ஐயங்கார், சென்னை ஐஐடி டீன் (கல்விப் பாடத்திட்டங்கள்) பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ், சென்னை ஐஐடி பிஎஸ் பட்டப்படிப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ், பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இக்கூட்டு முயற்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு: தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை ஐஐடி பிஎஸ் (தரவு அறிவியல்) பட்டப்படிப்பு மாணவர்களுக்கு GATE தேர்வு இன்றி ஐஐடி ரோபரில் எம்எஸ் படிப்பில் நேரடி சேர்க்கை. சென்னை ஐஐடி பிஎஸ் பட்டப்படிப்பு மாணவர்கள் ஐஐடி ரோபரில் ஒரு வருடம் வரை செலவிடலாம். சென்னை ஐஐடி பிஎஸ் பட்டப்படிப்பு மாணவர்கள் கோடைக்காலத்தில் ஐஐடி ரோபர் வழங்கும் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சென்னை ஐஐடி பிஎஸ் பட்டப்படிப்பு மாணவர்கள் ஐஐடி ரோபர் ஆசிரியர்களிடம் ப்ராஜக்ட்டுகள், உள்ளகப் பயிற்சிகளைத் தொடர முடியும்.
இந்த கூட்டு முயற்சியால் ஏற்படும் புதிய வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்த சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “சென்னை ஐஐடி-ன் பிஎஸ் பட்டப்படிப்புகள் அனைவருக்கும் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. எனவே ஐஐடி ரோபரில் முதுகலைப் படிப்புகளைத் தொடரவிருக்கும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்ட தொலைநோக்குத் திட்டமாகும். இதற்காக ஐஐடி ரோபரின் இயக்குநருக்கு எனது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நம் நாட்டில் உள்ள பிற உயர்கல்வி நிறுவனங்களும் ஐஐடி ரோபரின் வழியைப் பின்பற்றும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT