Last Updated : 28 Aug, 2024 06:10 PM

 

Published : 28 Aug 2024 06:10 PM
Last Updated : 28 Aug 2024 06:10 PM

பி.ஆர்க் படிப்பு: தமிழகத்தில் நடப்பு ஆண்டு 682 இடங்கள் காலியாக இருப்பதாக தகவல்

சென்னை: பிஆர்க் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் மொத்தம் 656 இடங்கள் நிரம்பியுள்ளன. இந்தாண்டு 682 இடங்கள் காலியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 37 கட்டிடவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் கட்டிட அமைப்பியல் (பி.ஆர்க்) படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் 1,338 இடங்கள் உள்ளன. இவை ஆண்டுதோறும் இணையதள கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பாண்டு சேர்க்கைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1,553 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியிடப்பட்டது.

இதையடுத்து சிறப்புப் பிரிவு மற்றும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16 முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 1,195 மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளை தேர்வு செய்தனர். அதில் 656 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு தற்போது சேர்க்கை கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 49 பேர் அரசுப் பள்ளி மாணவர்களாவர். இதன் விவரங்களை /barch.tneaonline.org/ எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இதற்கிடையே இந்தாண்டு பிஆர்க் படிப்பில் 656 இடங்களே நிரம்பியுள்ளன. இன்னும் 682 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. தொடர்ந்து எஸ்சிஏ பிரிவு காலியிடங்களுக்கான கலந்தாய்வு நாளை (ஆகஸ்ட் 30) இணைய வழியில் நடைபெற உள்ளது. அதன் முடிவில் காலியிடங்களின் இறுதி நிலவரம் ஆகஸ்ட் 31-ம் தேதி தெரியவரும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x