Published : 27 Aug 2024 08:45 PM
Last Updated : 27 Aug 2024 08:45 PM

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை ஆக.31 வரை நீட்டிப்பு

கோப்புப் படம்

சென்னை: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு பயிற்சித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: “தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) மற்றும் 311 தனியார் ஐடிஐ-க்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் மாணவர்களுக்காக நாகர்கோவில், உளூந்தூர்பேட்டை, கிண்டி ஆகிய அரசு ஐடிஐ-க்களில் காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோருக்காக பிரத்யேக ஃபிட்டர் தொழிற்பிரிவு இயங்கி வருகிறது. மேலும் அனைத்து அரசு ஐடிஐ-க்களிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

அனைத்து ஐடிஐ-க்களிலும் நடப்பு கல்வியாண்டுக்கான நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 16 வரை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு ஐடிஐ-யில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும். மேலும், தமிழக அரசு வழங்கும் இலவச சைக்கிள், சீருடை, ஷூ, வரைபடக் கருவிகள் உண்டு. அதோடு கட்டணமில்லா பேருந்து வசதியும் வழங்கப்படும்.

எனவே, காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாகர்கோவில், உளுந்தூர்பேட்டை கிண்டி தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று சேர்க்கை பெறலாம். சேர்க்கை நீட்டிப்பை மாற்றுத்திறனாளிகளும், அனைத்து மாணவர்களும் பயன்படுத்தி தாங்கள் சேர விரும்பும் அரசு ஐடிஐ-க்கு கல்விச்சான்றிதழ்களுடன் நேரில் சென்று விரும்பும் தொழிற்பிரிவை தேர்வு செய்து சேரலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் எழுந்தால் 9499055689 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x