Published : 27 Aug 2024 06:34 PM
Last Updated : 27 Aug 2024 06:34 PM

‘தமிழ் பயிற்று மொழியாக இல்லாமல் பொறியியல் டிப்ளமாவில் தமிழ் வழி சான்றிதழ் வழங்கினால் நடவடிக்கை’

சென்னை: தமிழ் மொழி பயிற்று மொழியாக இல்லாமல் பொறியியல் டிப்ளமா படிப்பில் தமிழ்வழி சான்றிதழ் வழங்கும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்நுட்பக் கல்வி ஆணையர் டி.ஆபிரகாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆபிரகாம் அனைத்து வகை பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு இன்று அனுப்பியுள்ள உத்தரவின் விவரம்: "தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சில தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமா படிப்பை தமிழ் வழியில் பயின்றதாக தமிழ் வழி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. தொழில்நுட்பக் கல்வித்துறையின் டிப்ளமா படிப்பு தொடர்பான விதிகளில் பயிற்று மொழி ஆங்கிலம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் டிப்ளமா படிப்புக்கான பயிற்றுமொழி ஆங்கிலம் மட்டுமே. தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்யும் சட்டம் 2010ம் ஆண்டும் அதைத்தொடர்ந்து அச்சட்டத்துக்கான திருத்த சட்டம் 2012ம் ஆண்டிலும் கொண்டு வரப்பட்டன. திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், தமிழ் தவிர இதர மொழிகளை பயிற்றுமொழியாக பயின்று தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள் தமிழ் வழி ஒதுக்கீட்டுக்கு தகுதிடையவர் அல்லர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2022 - 2023ம் கல்வி ஆண்டு முதல் சென்னை தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கோவை, திருச்சி, மதுரை, நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமா படிப்புகளை தமிழ்வழியில் பயிற்றுவிப்பதற்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது.

எனவே, மேற்குறிப்பிடப்பட்ட அரசாணைகளின்படி, தொழில்நுட்பக் கல்வித்துறையின் டிப்ளமா படிப்பு தொடர்பான விதிமுறைகளின்படியும் பயிற்று மொழி ஆங்கிலம் மட்டும் என்பதால் 2022 - 2023 முன்பு வரை சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு தமிழ் வழி கல்விச் சான்றிதழ் வழங்க வழிவகையில்லை. இனி வரும் காலங்களில் தவறுதலாக தமிழ் வழி சான்றிதழ் வழங்கப்படுவது தெரியவந்தால் அச்சான்றிதழை வழங்கிய பாலிடெக்னிக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு பணியில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதற்கு ஒன்றாம் வகுப்பு முதல் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை முழுவதையும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை மட்டும் தமிழ் வழியில் படித்திருந்தால் தமிழ் வழி இடஒதுக்கீடு கோர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x