Published : 26 Aug 2024 02:49 PM
Last Updated : 26 Aug 2024 02:49 PM
புதுச்சேரி: ஜிப்மரில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள எம்பிபிஎஸ் இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் தேர்வான மாணவர்களுக்கு கலந்தாய்வு இன்று (ஆக.26) தொடங்கியது. வரும் 29-ம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடக்கிறது.
மத்திய அரசு நிறுவனமான ஜிப்மரில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 243 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் புதுச்சேரி மாணவர்களுக்கு இடஒதுக்கீடாக 64 இடங்கள் தரப்படுகிறது. இந்த இடங்களுக்கு கலந்தாய்வு இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் நடக்கிறது. முதல் கட்ட கலந்தாய்வு இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், எம்பிபிஎஸ் இடங்கள் ஜிப்மரில் ஒதுக்கப்பட்டோருக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. ஜிப்மர் அகாடமி மையத்தின் நான்காவது தளத்திலுள்ள அரங்கில் கலந்தாய்வு துவங்கியது. இதில், புதுச்சேரி மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் இன்று முதல் 29-ம் தேதி வரை காலை 9 முதல் 11 மணி வரை பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
அதன்படி இன்று வந்தோர் காலையில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டனர். கலந்தாய்வுக்கு வந்தோர் அடையாளச் சான்று, நீட் தேர்வு ஹால் டிக்கெட், 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, தரவரிசை கடிதம், தற்காலிக இடம் ஒதுக்கீட்டுக் கடிதம், குடியிருப்புச் சான்று, சாதிச் சான்று உள்ளிட்டவற்றை எடுத்து வந்திருந்தனர். கலந்தாய்வு முடிந்தவுடன் முதலாண்டு வகுப்புகள் வரும் செப்டம்பர் 2-ல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை செயல்முறையை ஜிப்மர் இணையத்தளத்திலும் பார்க்கலாம்.
உறுதி மொழி பத்திரம் அவசியம்: ஜிப்மரில் புதுச்சேரி ஒதுக்கீட்டில் தேர்வாகியுள்ள 60 மாணவர்களில் 9 பேர் வெளி மாநிலத்தவர் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநர், முதல்வர், சுகாதாரத்துறை இயக்குநருக்கு இன்று புகாரும் தரவுள்ளனர். இச்சூழலில் முதல் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.புதுச்சேரி இடஒதுக்கீட்டில் இடம் பெறுவோர் உறுதி மொழிப் பத்திரம் தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ‘புதுச்சேரி மருத்துவ படிப்புக்கான அரசு ஒதுக்கீடு இடங்களைத் தவிர்த்து வேறு எந்த மாநிலத்திலும் விண்ணப்பிக்கவில்லை, தவறான தகவல் கண்டறியப்பட்டால் மாணவர் சேர்க்கை ரத்தாவதுடன் குற்றவியல் நடவடிக்கைக்கு ஆளாவேன் என்பதை அறிவேன்’ என நோட்டரி பப்ளிக் கையெழுத்துடன் பெற்றோர், மாணவர் ஆகியோர் கையெழுத்திட்டு உறுதி மொழி பத்திரம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT