Published : 26 Aug 2024 04:43 AM
Last Updated : 26 Aug 2024 04:43 AM

அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவத்தேர்வு கட்டண உயர்வு நிறுத்திவைப்பு: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பருவத்தேர்வு கட்டண உயர்வுநிறுத்தி வைக்கப்படுவதாகவும், சிண்டிகேட் கூடி முடிவெடுக்கும் வரை கட்டணம் உயர்த்தப்படாது எனவும் உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான பருவத் தேர்வு கட்டணம் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இதை திரும்பப் பெற வேண்டுமென மாணவர்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதையேற்று கட்டண உயர்வானதுதிரும்ப பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி, சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

பொறியியல் படிப்புகளுக்கான பருவத்தேர்வு கட்டணம் உயர்வு குறித்த அறிவிப்பானது அண்ணா பல்கலைக்கழக இணையதள பக்கத்தில் வெளியானது. இது கடந்த ஆண்டு சிண்டிகேட் கூட்டத்தில்எடுக்கப்பட்ட முடிவு. அப்போதுஅதை நான் நிறுத்தி வைத்திருந்தேன். இந்த ஆண்டு மீண்டும் அந்த அறிவிப்பு வெளியானதால் கிராமப்புற மாணவர்கள் பலரும் கவலை அடைந்தனர். மாணவர்கள் சார்பில்கட்டண உயர்வை நிறுத்தக்கோரி கோரிக்கைகளும் வைக்கப்பட்டிருந்தன. மேலும் இந்த முடிவு மாணவர்களை மிகவும் பாதிக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னிடம் கூறினார். அதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்களுடன் இணைந்து ஆலோசித்து ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மீறினால் நடவடிக்கை: அதன்படி அதிகரிக்கப்பட்ட இந்த தேர்வுக் கட்டணமானது நிறுத்தி வைக்கப்படுகிறது. இனி வரும் காலங்களிலும் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்படாது. புதிய ஆட்சி மன்றக்குழு கொண்டு வரப்பட்டால் மட்டுமே இது அமல்படுத்தப்படும். அதுவரை இந்த கட்டணம் மாற்றப்படாது. எனவே மாணவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அதேபோல், இதே கட்டணத்தை தான் தன்னாட்சிக் கல்லூரிகளும் வாங்கவேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

பேராசிரியர்கள் நியமன முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த முறைகேடு இப்போது அல்ல,10 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. எனவே கடந்த 10 ஆண்டுகளின் தரவுகளை கேட்டுள்ளோம். அதன்படி வெகு விரைவில் இந்தவிசாரணை முடிந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதில் மாணவர்களின் நலனையும் பார்க்க வேண்டும். அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முறைகேடுகள் தொடர்பாக கல்லூரி நிர்வாகங்கள் மீது எடுக்கும் நடவடிக்கை மாணவர்களின் படிப்பை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக கவனமாக கையாளுகிறோம். இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x