Published : 26 Aug 2024 06:46 AM
Last Updated : 26 Aug 2024 06:46 AM

தமிழக அரசின் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டால் நனவாகும் ஏழை மாணவர்களின் ‘டாக்டர்’ கனவு: 622 பேருக்கு இடம் கிடைத்தது

சென்னை: தமிழகத்தில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு ஏழை மாணவர்களின் ‘டாக்டர்’ கனவை 5-வது ஆண்டாக நனவாக்கியுள்ளது. நடப்பாண்டில் 622 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.

நீட் தேர்வு வருவதற்கு முன்பு தமிழகத்தில் ஆண்டுதோறும் 40-க்கும் குறைவான அரசு பள்ளி மாணவர்களே மருத்துவப் படிப்பில் சேர்ந்து வந்தனர். நீட் தேர்வுக்கு பின்னர் இந்த எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக குறைந்தது. நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவு வீணாகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் கடந்த 2020-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து, படிப்புக்கான முழு செலவையும் ஏற்பதாக அறிவித்தது.

இத்திட்டம் ஏழை மாணவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசு பொறியியல், கால்நடை, ஆயுஷ், சட்டம், வேளாண் படிப்புகளுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை விரிவுபடுத்தியது. இந்த இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. குறிப்பாக, நீட் தேர்வுக்கு முன்பு இருந்ததைவிட, அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு அதிக அளவில் நனவாகி வருகிறது.

மேலும் 2020-21-ம் ஆண்டில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் அரசு பள்ளி மாணவர்கள் 435 பேரும், 2021-22-ல் 555 பேரும் 2022-23-ல் 584 பேரும் நடப்பு 2023-24-ம் ஆண்டில் 622 பேரும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அதன்படி இந்தாண்டு 496 எம்பிபிஎஸ், 126 பிடிஎஸ் இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்துள்ளன. இதன் மூலம் 5-வது ஆண்டாக இந்த ஆண்டும் கூலித்தொழிலாளி, வீட்டு வேலை செய்பவர், ஏழை விவசாயி போன்ற அடித்தட்டு சாமானியர்களின் 622 பிள்ளைகள் டாக்டர்களாக உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x