Published : 17 Aug 2024 04:43 PM
Last Updated : 17 Aug 2024 04:43 PM

“மாணவர்கள் படைப்பாளிகளாக உருவாக அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்” - அன்பில் மகேஸ் உறுதி

திருச்சியில் சிறார் படைப்பாளர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், சான்றிதழ்களை வழங்குகிறார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

திருச்சி: மாணவர்கள் படைப்பாளிகளாக உருவாக அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் தேன்சிட்டு, புது ஊஞ்சல் ஆகிய சிறார் இதழ்களில் பங்களித்த மாணவ படைப்பாளிகளுக்கு பாராட்டு விழா திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஆக.17) நடைபெற்றது. விழாவில், மாணவ படைப்பாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசியது: "மாணவர்கள் என்ற நிலையிலிருந்து ஒரு படைப்பாளி என்ற நிலைக்கு உயர்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. இங்கு வந்துள்ள மாணவ, மாணவியருக்கு மட்டுமல்ல, யாரெல்லாம் படைப்புகளை அளித்துள்ளார்களோ, படைப்புகளை அளிக்க வேண்டும் என்ற ஊக்கம் பெற்றுள்ளார்களோ அவர்களுக்கும் சேர்த்துத் தான் இந்தப் பாராட்டு விழா.

மாணவர்கள் இந்த நிலைக்கு உயர தயார்படுத்திய பெற்றோர்கள், ஆசிரியர்களை பாராட்டுகிறேன். வீரமாமுனிவர், அழ.வள்ளியப்பா உள்ளிட்ட ஏராளமானோர் குழந்தைகளுக்காக பல்வேறு படைப்புகளை அளித்துள்ளனர். குழந்தைகளுக்கான பல பத்திரிகைகள் பொருளாதார ரீதியாக வெற்றி பெறாததால் நிறுத்தப்பட்டு விட்டன. ஆனால், தற்போது அரசே குழந்தைகளை ஒரு படைப்பாளியாக உருவாக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை எடுத்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

மாணவர்கள் பள்ளிக்குச் செல்கிறார்கள், பாடங்களை படிக்கிறார்கள், வீட்டுப் பாடம் எழுதுகிறார்கள் அத்துடன் அவர்களது பணி முடிந்துவிடவில்லை. ஒரு படைப்பாளியாக உருவாக வாய்ப்புகள் தற்போது ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. மாணவர்கள் படிப்போடு மட்டுமல்லாது அவர்களுக்குள் உள்ள தனித்திறன்களை இதன் மூலம் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. தனது படைப்பு, தேன் சிட்டு, புது ஊஞ்சல் இதழ்களில் வந்து விட வேண்டும் என்ற முயற்சியோடு குழந்தைகள் படைப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

ஒவ்வொரு வகுப்பறைக்கும் இந்த இதழ்கள் அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு குழந்தையின் படைப்பும் தமிழகம் முழுவதும் இதன் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதன் வழியாக பெற்றோர்களுக்கு ஏற்படும் சந்தோஷம், பெருமிதம் ஆகியவற்றை பார்த்து, அந்த குழந்தைகள் இன்னும் ஊக்கம் பெறுகின்றனர். இது பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஒரு நேர்மறையான சிந்தனையை உருவாக்கும்.

குழந்தைகளின் தனித்திறமைகளை ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து ஊக்குவிக்க வேண்டும். மாணவர்கள் படைப்பாளிகளாக உருவாக அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும். அதன் ஒரு பகுதியாகத் தான் சிறந்த படைப்பாற்றல் கொண்ட குழந்தைகள் மூவரை தேர்வு செய்து கவிமணி விருதுடன் ரூ.25 ஆயிரம் பரிசும் வழங்குகிறோம்.

அதேபோன்று இலக்கிய விழாக்கள் நடத்தி, அதில் மூன்று குழந்தைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது. இவை குழந்தைகளை படைப்பாளிகளாக உருவாக்கும் முயற்சியாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாடப் புத்தகங்களின் விலையை ஏற்றி விட்டோம் என பலரும் விமர்சிக்கின்றனர். ஆண்டுக்கு ஆண்டு காகிதத்தின் விலை, அச்சுக் கூலி, அட்டை விலை ஆகியவை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் அரசு விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது தான் 25 முதல் 40 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது லாப நோக்கத்துடன் செய்யப்பட்டது அல்ல. இன்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் விலையில்லாமல் தான் வழங்கப்படுகிறது" இவ்வாறு அமைச்சர் பேசினார். விழாவில், திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் அமுதவள்ளி, திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x