Published : 17 Aug 2024 04:01 PM
Last Updated : 17 Aug 2024 04:01 PM

7.5% உள்ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது: தமிழக தனியார் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை

கோப்புப் படம்

சென்னை: “7.5 சதவீத உள் ஒதுக்கீடு இடங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக் கூடாது” என்று தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் டி.ஆபிரகாம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட செய்திக் குறிப்பு: “அரசுப் பள்ளிகளில் படித்து பொறியியல் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களின் கல்வி செலவினங்களான, படிப்புக் கட்டணம், விடுதிக் கட்டணம் அல்லது போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் தமிழக அரசே வழங்கும் என உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களிடம் எவ்விதமான கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது என்று அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு, அரசு உதவி பெறும் தொழிற்கல்லூரிகள், தனியார் சுயநிதி தொழிற்கல்லூரிகளில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் சேர்க்கை பெறும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டண சலுகை வழங்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை ஏற்கெனவே தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், பொறியியல் கல்லூரிகளில் சேரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் பொறியியல் கல்லூரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீடு செய்யும் இலவச மற்றும் கட்டண இருக்கைகளில் சேரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர, கிறிஸ்தவ மதம் மாறிய மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் உள்ளவர்களுக்கு கட்டாய, திருப்பி செலுத்தப்படாத அனைத்துக் கல்வி கட்டணங்களும் வழங்கப்படும் எனவும் உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அக்கட்டணங்கள் அனைத்தும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டபின் மாணவர்கள் அக்கட்டணங்களை தாங்கள் பயிலும் கல்லூரிக்குச் செலுத்த வேண்டும்.

மாணவர்களின் வங்கி கணக்கில் கட்டணத்தொகையை வரவு வைப்பதற்கு முன்பாக அவர்களிடம் எந்தவித கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது என்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளோம். ஆனாலும், அரசின் ஆணைகளை மீறி சில பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வின் வழி அரசு ஒதுக்கீட்டில் சேர வரும் மாணவர்களிடம் அனைத்துக் கட்டணங்களையும் செலுத்த வற்புறுத்தப்படுவதாக புகார்கள் பெறப்படுகின்றன.

எனவே, அரசு ஒதுக்கீட்டில் கலந்தாய்வின் மூலம் சேர்க்கைக்கு வரும் மாணவர்களிடம் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் எச்சரிக்கப்படுகின்றன. இதை மீறும் பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x