Published : 11 Aug 2024 10:09 PM
Last Updated : 11 Aug 2024 10:09 PM
சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 500 மையங்களில் காலை, மாலை என இரண்டு ஷிப்டுகளாக நடைபெற்றது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் மருத்துவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளாமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதிப் பெறுவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது. அதன்படி, எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளாமோ படிப்புகளுக்கு 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடுமுழுவதும் 185 நகரங்களில் 500 மையங்களில் இன்று (ஆகஸ்ட் 11) நடைபெற்றது. தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்த சுமார் 25 ஆயிரம் மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதும் 2.3 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 95 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர்.
முறைகேடுகளை தடுக்க ஏற்கெனவே திட்டமிட்டப்படி காலை, மாலை என இரு பிரிவுகளாக தேர்வுகள் நடைபெற்றது. 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மூன்றரை மணி நேரம் நடந்த தேர்வில் 50 சதவீதம் பேரும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 7 மணி வரை மூன்றரை மணி நேரம் நடந்த தேர்வில் மீதமுள்ள 50 சதவீத பேரும் பங்கேற்றனர்.
தேர்வுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக தேர்வர்கள் ஹால்டிக்கெட், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் தேர்வுக்கூடத்துக்கு வந்தனர். தீவிர சோதனைகளுக்கு பின்னரே தேர்வர்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள், உணவு பொருட்கள் தேர்வு மையத்துக்குள் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
காலை மற்றும் மாலையில் தேர்வு எழுதிய இருதரப்பினருக்கும் மாறுபட்ட வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 800 மதிப்பெண்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வில் பயோகெமிஸ்ட்ரி, அனாடமி, காது மூக்கு தொண்டை (இஎன்டி), மகப்பேறு - மகளிர் நலம், குழந்தை மருத்துவம், கண் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் 200 கேள்விகள் கேட்கப்பட்டன.
ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் வழங்கப்படுகிறது. தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT