Published : 06 Aug 2024 08:26 PM
Last Updated : 06 Aug 2024 08:26 PM

சென்னை ஐஐடி-க்கு ரூ.228 கோடியை நன்கொடையாக வழங்கிய முன்னாள் மாணவர்!

நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர் கிருஷ்ணா சிவுகுலா

சென்னை: சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா (எம்டெக், 1970) ஐஐடிக்கு ரூ.228 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார். அகில இந்திய அளவில் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய அளவிலான இந்த நன்கொடையால், சென்னை ஐஐடி பணிகள் மேலும் வலுப்படும் என ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை ஐஐடியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வில் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலாவை கவுரவிக்கும் விதமாக கல்வி நிறுவனத்தின் தொகுப்பு ஒன்றுக்கு ‘கிருஷ்ணா சிவுகுலா பிளாக்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா, சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, சென்னை ஐஐடி டீன், பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா, ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில் சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி செய்தியாளர்களிடம் கூறியது: “பல ஆண்டுகளுக்குப் பிறகும் எங்களின் முன்னாள் மாணவர் ஒருவர் தாம் படித்த கல்வி நிறுவனத்தை நினைவில் வைத்து செயலாற்றுவது, கல்வி மட்டுமே மனிதகுலத்திற்கு அளிக்கக் கூடிய ஒரே அழியாத செல்வம் என்பதை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது” என்றார். கிருஷ்ணா சிவுகுலாவின் மிகப்பெரிய பங்களிப்பிற்காக அவருக்கு நன்றி தெரிவித்த அவர், எதிர்கால சந்ததியினர் அறிவாற்றலைப் பெறுவதில் மிகுந்த பயனடைவார்கள் என்றார்.

இந்தோ-எம்ஐஎம் நிறுவனரும், தலைமைச் செயல் அலுவலருமான டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா பேசுகையில், “சென்னை ஐஐடியில் எனது கல்வி மிகவும் மறக்க முடியாததாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருந்ததுடன் வாழ்க்கையில் பலவற்றைச் சாதிக்கவும் உதவியது. அகில இந்திய அளவில் எந்தவொரு பல்கலைக்கழகத்திற்கும் வழங்கப்பட்ட தொகையைவிட மிகப்பெரிய நன்கொடையை வழங்கி, நான் படித்த கல்வி நிறுவனத்திற்கு ஒரு பரிசாக திருப்பிச் செலுத்தும் நிலையில் இருக்கிறேன்” என்றார்.

சென்னை ஐஐடி டீன் மகேஷ் பஞ்சக்நுலா பேசுகையில், “டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா வெற்றிகரமான தொழில்நுட்பத் தொழிலதிபர் மட்டுமல்ல, தலைசிறந்த முன்னாள் மாணவரும் ஆவார். அவருடைய பணிவும் பெருந்தன்மையும் வரவிருக்கும் காலங்களில் முன்னாள் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய முன்மாதிரியான பண்புகளாகும்” என்று குறிப்பிட்டார்.

இந்த நன்கொடையைக் கொண்டு சென்னை ஐஐடியில் படிக்கும் சர்வதேச மாணவர்களின் கல்வி உதவித்தொகை, ஆராய்ச்சிக்கான சிறப்பு மானியத் திட்டம், சென்னை ஐஐடியின் புதிய மாணவர்களுக்கான இளநிலை பட்ட கல்வி உதவித்தொகை திட்டம், விளையாட்டு வீர்ர்களுக்கான பாடத்திட்டம், சாஸ்த்ரா இதழை மேம்படுத்துதல், கிருஷ்ணா பிளாக் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என ஐஐடி தெரிவித்துள்ளது.

டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா 1997-ல் ‘மெட்டல் இன்ஜெக்சன் மோல்டிங்’ (எம்ஐஎம்) எனப்படும் அதிநவீன பொறியியல் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்தார். அமெரிக்காவில் அப்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பமாக இது இருந்தது. சென்னை ஐஐடி கடந்த 2015-ம் ஆண்டில் அவருக்கு ‘மதிப்புமிகு முன்னாள் மாணவர் விருது’ வழங்கியதன் மூலம் அவரின் தொழில்முறை சிறப்பையும், சமூகத்தற்கு ஆற்றும் பங்களிப்புகளையும் அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x