Last Updated : 04 Aug, 2024 12:25 PM

 

Published : 04 Aug 2024 12:25 PM
Last Updated : 04 Aug 2024 12:25 PM

வினாத்தாள் கசிவு: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக எம்பிபிஎஸ் தேர்வு ஒத்திவைப்பு

புதுச்சேரி: வினாத்தாள் கசிந்ததால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் எம்பிபிஎஸ் முதலாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள 12-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எம்பிபிஎஸ் முதலாண்டு தேர்வுகள் திட்டமிடப்பட்டு, அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை தேர்வுக்கூடம்வரை மாணவர்கள் வந்த நிலையில் திடீரென்று தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.

அதற்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. நிர்வாகக் காரணங்களுக்காக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மருத்துவ உதவிப்பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில் திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை விரைவில் தெரிவிக்கப்படும் என்று இணைப்புக் கல்லூரிகளின் டீன்கள், இயக்குநர்களுக்கு தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக பல்கலைக்கழக வட்டாரங்களில் இன்று (ஆக.4) விசாரித்தபோது, “முதலாண்டு எம்பிபிஎஸ் படிப்புக்கான வினாத்தாள் கசிந்துள்ளதாக தனியார் மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தேர்வுக் கூடத்துக்கு மாணவர்கள் வந்த நிலையிலும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

மத்திய பல்கலைக்கழகம் தற்போது இணைப்பு கல்லூரிகளில் தேர்வுகளை நடத்துதல், சரியான நேரத்தில் முடிவுகளை அறிவிப்பதில் சரியான அணுகுமுறைகளை கடைபிடிப்பதில்லை. முதுகலைப் படிப்புகளில் சேர கடைசி தேதிக்கும் பிறகும் இளநிலை முடிவுகளை அறிவிப்பதில்லை. இதுதொடர்பாக இதுவரை பொறுப்பில் இருந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர்களும், அரசும் இவ்விஷயத்தில் கவனிக்காததும் ஓர் காரணம். அதனாலேயே தற்போதும் இதுபோல் வினாத்தாள் கசிவிலிலும் சிக்குகின்றனர்.” என்றனர்.

காலம் தாழ்ந்த தேர்வு முடிவுகளால் தவிக்கும் மாணவர்கள்: இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறியதாவது: புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. பல்கலைக்கழகத்தின் நிர்வாக சீர்கேடு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் அலட்சியத்தால் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் முதுநிலைக் கல்வி ஆண்டுதோறும் கேள்விக்குறி ஆகிறது. புதுச்சேரியில் உயர்கல்வித்துறை முறையாக செயல்படுகிறதா என்றும் தெரியவில்லை. இந்த விஷயத்தில் புதுச்சேரி ஆளுநர், முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம். செமஸ்டர் தேர்வுகளை இதர மாநிலங்களை போல் சரியான நேரத்தில் நடத்தி, சரியான நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவிடவேண்டும்.” என்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x