Published : 01 Aug 2024 09:44 PM
Last Updated : 01 Aug 2024 09:44 PM

'நான் முதல்வன்' திட்ட ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டு தேர்வுக்கு வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் 1,000 மாணவர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் மாதம் ரூ.7500 ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான மதிப்பீட்டு தேர்வுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக சிறப்புத் திட்ட இயக்குநர் (நான் முதல்வன் - போட்டித் தேர்வுகள் பிரிவு) இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: “நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த 07.03.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இப்பிரிவு, தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழக அரசின் 2023-2024-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்துடன் இணைந்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச் செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள் 1000 பேர் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். இத்திட்டம் கடந்த ஆண்டு முதல் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக அடுத்த ஆண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வை வரும் செப்டம்பர் 15-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தமிழக மாணவர்கள் 1000 பேருக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 2-ம் தேதி (இன்று) முதல் ஆன்லைனில் (https://www.naanmudhalvan.tn.gov.in) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 17-ம் தேதி ஆகும். தேர்வுக்கான நுழைவுச்சீட்டு செப்டம்பர் 9-ம் தேதி வெளியிடப்படும். தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x