Published : 29 Jul 2024 05:54 AM
Last Updated : 29 Jul 2024 05:54 AM
சென்னை: பொறியியல், மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்கள் பள்ளிகளில் உறுதிச் சான்றிதழ் பெற அணுகும்போது தாமதமின்றி வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. அதற்காக அந்த மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் உறுதிச் சான்றிதழ் (bonafide) பெறுவதற்கு அணுகும்போது அவற்றை வழங்குவதற்கு தாமதம் ஏற்படுவதாக தெரியவருகிறது. அந்த மாணவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பள்ளியிலும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை வேறு பள்ளியிலும் பயின்றுள்ள நிகழ்வுகளில் கடைசியாக பயின்றுள்ள பள்ளியில் இருந்து இந்த சான்றிதழ் உடனே வழங்கப்படாமல் கால தாமதம் ஏற்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இதுபோல், வெவ்வேறு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சார்பான விவரங்களை எமிஸ் தளத்தில் இருந்து பெற்று அதனடிப்படையில் உறுதிச் சான்றிதழை கால தாமதமின்றி உடனே சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கிட வேண்டும்.
இதுசார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும். மேற்கண்ட சான்றிதழை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடன் மேலொப்பம் செய்தும் வழங்குவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT