Published : 27 Jul 2024 04:09 AM
Last Updated : 27 Jul 2024 04:09 AM
சென்னை: திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளை என்டிஏ நேற்று வெளியிட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை தேசிய அளவில் 415 குறைந்துள்ளது. முழு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை 67-ல் இருந்து 17 ஆக குறைந்தது.
நம் நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வில் (NEET) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் கடந்த மே 5-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை 4,750 மையங்களில் 23.33 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகின.
இந்த நிலையில், வினாத்தாள் கசிவு, கணிசமான மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது ஆகிய விவகாரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் மீதான விசாரணையில், மறுதேர்வு நடத்த முடியாது என நீதிபதிகள் தெரிவித்த நிலையில், மனுதாரர்கள் இயற்பியல் பிரிவில் 19-வது வினாவுக்கு 2 பதில்கள் வந்தது குறித்த வாதத்தை முன் வைத்தனர். அதன்பிறகு, டெல்லி ஐஐடியின் உதவியை உச்ச நீதிமன்றம் நாடியது. டெல்லி ஐஐடி அந்த வினாவுக்கு சரியான ஒரு பதிலை தெரிவித்தது. இதனால் கணிசமான மாணவர்களுக்கு 5 மதிப்பெண் குறைக்கப்பட்டது. அதனுடன் ஏற்கனவே கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டதன் அடிப்படையிலும் திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளை என்டிஏ நேற்று வெளியிட்டது.
கடந்த ஜூன் மாதம் வெளியான முடிவுகளின்படி, நாடு முழுவதும் மொத்தம் 13 லட்சத்து 16,268 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். நேற்று வெளியான திருத்தப்பட்ட முடிவுகளில் 13 லட்சத்து 15,853 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 415 குறைந்துள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை இந்த ஆண்டு ஒரு லட்சத்து 52,920 பேர் தேர்வு எழுதியதில் 89,198 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஜூன் மாதம் வெளியான முடிவுகளில் இந்த எண்ணிக்கை 89,426 ஆக இருந்தது.
தரவரிசையிலும் மாற்றம்: நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. முதலில் வெளியான முடிவுகளில் தமிழகத்தை சேர்ந்த 8 பேர் உட்பட மொத்தம் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணுடன் முதலிடம் பெற்றிருந்தனர். ஆனால், மதிப்பெண் மாற்றங்களுக்கு பின்னர் தற்போது தமிழகத்தில் இருந்து பி.ரஜனீஷ் என்ற மாணவர் உட்பட 17 பேர் மட்டுமே முழு மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக தரவரிசை பட்டியலில் இருந்து 50 மாணவர்கள் பின்தங்கிவிட்டனர். ஜூன் மாத முடிவுகளில் முதலிடத்தில் இருந்த மாணவர்கள் வேத் சுனில் குமார் ஷிண்டே (மகாராஷ்டிரா), சையது ஆரிபின் யூசுப் (தமிழகம்) ஆகியோர் 715 மதிப்பெண்ணுடன் 25, 26-வது இடங்களுக்கு பின்தங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT