Published : 26 Jul 2024 04:50 AM
Last Updated : 26 Jul 2024 04:50 AM
சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் ஷிப்ட் 1 மற்றும் ஷிப்ட் 2-ல் 7,360 கவுரவ விரிவுரையாளர்களை ரூ.25 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்க அனுமதி வழங்கி உயர்கல்வித்துறை தனித்தனி அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:
நடப்பு கல்வி ஆண்டில் (2024-2025) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில ஷிப்ட் 1-ல் பாடப்பிரிவுகளை நடத்த தேவையான 6,445 கவுரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதியத்தில் நியமிக்க அனுமதியும் அவர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.25 ஆயிரம் வீதம் 11 மாதங்களுக்கு தேவையான ரூ.177 கோடியே ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் உரிய ஆணை வழங்குமாறு கல்லூரி கல்வி இயக்குநர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
இயக்குநரின் கருத்துருவை ஆய்வுசெய்து நடப்பு கல்வி ஆண்டில் ஷிப்ட் 1-ல் பாடப்பிரிவுகளை நடத்த வசதியாக 5,699 விரிவுரையாளர்களை மாதம் ரூ.25 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 11 மாதங்களுக்கு பணியமர்த்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியும், அதற்கு தேவையான ரூ.156 கோடியே 72 லட்சம் நிதியை ஒதுக்கியும் அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், உயர்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள மற்றொரு அரசாணையில் நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலைக் கல்லூரிகளில் ஷிப்ட் 2-ல் பாடப்பிரிவுகளை நடத்த தேவையான 1,661 கவுரவ விரிவுரையாளர்களை ரூ.25 ஆயிரம் மாதாந்திர தொகுப்பூதியத்தில் நியமிக்க அனுமதி அளித்தும் அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர்களை நிரந்தர பணி அடிப்படையில் நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆகஸ்ட் 4-ம் தேதி நடத்தப்பட இருந்த போட்டித்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT