Published : 25 Jul 2024 02:58 PM
Last Updated : 25 Jul 2024 02:58 PM
திருச்சி: குழந்தைகள் கற்றல் திறனை தாங்களே மேம்படுத்திக் கொள்ளும் முன்னோடி முயற்சியாக திருச்சியில் பெற்றோரின் பங்களிப்புடன் சுய கற்றல் மையங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தவரை 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் பெரும்பாலான குழந்தைகள் வீடுகளுக்குச் சென்று படிக்காமல் இருப்பதால், அவர்கள் மொழி, கணக்கு உள்ளிட்ட பாடங்களில் அடிப்படை விஷயங்கள்கூட அறியாத நிலையில் உள்ளனர். இதனால், குழந்தைகளுக்கு கற்றலில் உள்ள இந்த சுணக்கத்தை போக்கும் வகையில், பெற்றோரின் உதவியுடன் குழந்தைகள் சுயமாகவே கற்கும் வகையில் சுய கற்றல் மையங்களை தொடங்கி, அதை செயல்படுத்தி வருகிறார் கல்வியாளரும், காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி மைய ஓய்வுபெற்ற முதல்வருமான எஸ்.சிவகுமார்.
இத்திட்டம் குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் அவர் கூறியது: இந்த மையத்தின் நோக்கம், குழந்தைகள் தாங்களாகவே கற்றுக்கொள்வதற்கான திறன்களை வளர்ப்பதாகும். புத்தகங்கள், ஆன்லைன், செயற்கை நுண்ணறிவு, தன்னார்வ செயல்முறைகள் ஆகியவற்றை இதற்கு பயன்படுத்தி வருகிறோம். சுய கற்றல் அட்டைகளை குழந்தைகளே தயாரித்து படித்து வருகின்றனர். 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்காக, மாலை 6 முதல் இரவு 7.30 மணி வரை அவர்கள் வசிக்கும் தெருவிலேயே சமூக அக்கறை கொண்ட பெற்றோர் கண்டறியப்பட்டு, சிறு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இங்கு படிக்கும் குழந்தைகள் தாங்களாகவே வினா- விடை எழுதி, அதை சுய மதிப்பீடு செய்து, தவறுகளை திருத்துகின்றனர். இது, அவர்களது கற்றல் திறனை மேம்படுத்துகிறது. சிறு குழுக்களாக இருக்கும்போது, குழந்தைகள் கவனச் சிதறல் இல்லாமல் ஆர்வத்துடன் படிக்கின்றனர். இந்த குழந்தைகளுக்கு வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி, பெற்றோர் உதவியுடன் குழந்தைகள் வீடுகளில் படிப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்கின்றனர். குழுவாக குழந்தைகளுக்கு கல்வியைப் போதிப்பதுடன் மட்டுமின்றி சமூக ஒற்றுமையையும் வளர்க்கும் இந்த முயற்சியை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் பிற இடங்களுக்கும் விரிவாக்கும் திட்டமும் உள்ளது.
இதற்கு எந்த செலவும் இல்லை என்றார்.அந்தநல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் கா.மருதநாயகம் கூறுகையில், ‘‘இது, ஒரு புதிய முயற்சி. பெற்றோர்களுக்கு குழந்தை கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை உணர்வதற்கு தூண்டு கோலாக அமைகிறது’’ என்றார். இதுகுறித்து சண்முகா உதவி பெறும் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் துரை.ஜெயபாக்கியம் கூறுகையில், ‘‘இந்த திட்டத்தின் மூலம் வீடுகளில் குழந்தைகள் தொடர்ச்சியாக படிக்கின்றனர். இதில் பெற்றோரது ஒத்துழைப்பும் அதிகரித்துள்ளது’’ என்றார்.
பெற்றோரான மாரியம்மாள் கூறுகையில், ‘‘என் குழந்தை முன்பு வீட்டில்படிக்கும் நேரம் மிகக் குறைவாக இருந்தது. இப்போது மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து படிப்பதால், நன்றாகவும், அதிக நேரமும் படிக்கிறார்’’ என்றார். கம்பரசம்பேட்டை காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஸ்ரீரங்கம் சண்முகா உதவி பெறும் நடுநிலைப் பள்ளி, ராஜன் நகராட்சி நடுநிலைப் பள்ளி, திருவானைக்காவல் பாரதியார் நினைவு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்காக பெற்றோர் தங்கள் வீடுகளில் இந்த சுய கற்றல் மையங்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT