Last Updated : 25 Jul, 2024 04:56 PM

5  

Published : 25 Jul 2024 04:56 PM
Last Updated : 25 Jul 2024 04:56 PM

‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்துக்கு ரூ.360 கோடி ஒதுக்கீடு: மாதம் ரூ.1,000 பெற நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கி, வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் இன்று வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்: இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், “உயர் கல்வியில் பெண்கள் சேர்க்கையை அதிகரிக்க அறிமுகப்படுத்தப்பட்ட,‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டத்தை’ போல், அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க ‘தமிழ்ப் புதல்வன் திட்டம்’ அறிமுகப்படுத்தப்படும். இவர்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்’’ என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், புதுமைப்பெண் திட்டத்தில் 3.28 லட்சம் மாணவிகள் பயன்பெறும் நிலையில், தமிழ்ப் புதல்வன் திட்டத்திலும் 3.38 லட்சம் மாணவர்கள் என கணக்கில் கொண்டு மாணவனுக்கு மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.393.60 கோடி மற்றும் திட்டத்தை செயல்படுத்த நிர்வாக செலவாக ரூ.7.87 கோடி என ரூ.401.47 கோடி தேவைப்படுவதாகவும், எனவே ஓராண்டுககு ரூ.401.47 கோடி நிதி வழங்கும்படி கேட்டிருந்தார்.

இதை பரிசீலித்த தமிழக அரசு, இந்த நிதியாண்டு முதல், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தை அறிமுகப்படுத்தி மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்க, வழிகாட்டி நெறிமுறைகள் அடிப்படையில் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இந்த கல்வியாண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.360 கோடிக்கு நிதி ஒப்புதல் அளித்து உத்தரவிடப்படுகிறது. இத்திட்டத்துக்கு அடுத்த நிதியாண்டில் தேவைப்படும் நிதி ஒதுக்கீட்டை, சமூக நலத்துறை மானியக் கோரிக்கையில் கோரும்படியும் சமூக நலத்துறை ஆணையருக்கு உத்தரவிடப்படுகிறது.

வழிகாட்டு நெறிமுறைகள்: இத்திட்டத்துக்காக மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க பிரத்யேக விண்ணப்பப் படிவம், ஆன்லைனில் ஏற்றப்படும். விண்ணப்பப் படிவத்தில் அளித்துள்ள ஆதார் எண்ணை சார்ந்த கல்லூரியில் இருந்து பள்ளிக் கல்வித் துறையின் எமிஸ் மூலம் சரிபார்த்து, அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தது உறுதி செய்யப்படும். அதன்பின், உயர்கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும்.விண்ணப்பிக்கும் மாணவருக்கு பிரத்யேக எண் உருவாக்கி, மாணவரின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

இத்திட்டத்தில், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயின்ற, அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்கள் முழுமையாக பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்படும். இதற்கு வருமான உச்சவரம்பு, இனம், ஒதுக்கீடு என எந்த ஒரு பாகுபாடும் இல்லை. 6 முதல் 12 வரை அரசுப் பள்ளியில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்கள், தமிழகத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி பாடப்பிரிவில் படிப்பவராக இருத்தல் வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியிலும், 8 , 9 அல்லது 10-ம் வகுப்பு வரை படித்து ஐடிஐ பயிலும் மாணவர்களும் இதில் பயன்பெறலாம். உயர்கல்வி என்பது கலை அறிவியல், தொழில்சார் படிப்புகள், இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள், பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி, ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். தொலைதூரக் கல்வி, அஞ்சல்வழி, அங்கீகரிக்கப்படாத உயர்கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தில் ஊக்கத்தொகை பெற இயலாது.

வேறு ஏதேனும் உதவித்தொகை பெற்று வருபவராக இருந்தாலும் இ்த்திட்டத்தில் பயன்பெறலாம். மற்ற மாநில பள்ளிகளில் பயின்றவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. ஒரே குடும்பத்தில் எத்தனை மாணவர்கள் தகுதி பெற்றாலும் அனைவரும் இத்திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த பாடப்பிரிவில் பயிலும் மாணவர்கள் முதல் 3 ஆண்டுகள் மட்டும் ஊக்கத் தொகை பெறலாம். பிற மாநிலத்தில் மத்திய அரசின் கீழ் செயல்படும் ஐஐடி, என்ஐடி, ஐஐஎஸ்இஆர் போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறுவர்.

இத்திட்டத்துக்கு மாநில அளவில் தலைமைச்செயலர் தலைமையில், 15 துறைகளின் செயலர்களை உறுப்பினர்களாக கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சமூக நலத்துறை செயலரை தலைவராக கொண்டு மாநில அளவிலான மேற்பார்வைக் குழு, மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்ட மாவட்ட அளவிலான செயல்பாட்டுக்குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x