Published : 25 Jul 2024 04:37 PM
Last Updated : 25 Jul 2024 04:37 PM
சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளை கற்பித்தல் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: "அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மடிக் கணினிகள், கையடக்கக் கணினிகள் (டேப்லெட்) பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும். இவற்றை கையாளும் வழிமுறைகள், பயன்பாடுகளை எஸ்சிஇஆர்டி தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். அதன்படி இவ்விரு சாதனங்களை அறிமுகம் இல்லாத வைஃபை உடன் இணைத்து பயன்படுத்தக் கூடாது.
இதுதவிர கையடக்கக் கணினிக்காக வழங்கப்பட்டுள்ள சிம் கார்டு மற்றும் பள்ளிக்கல்வித் துறை பரிந்துரைக்கும் மென் பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதேபோல், மாணவர்களுக்கான வளரறி மதிப்பீட்டை டேப்லெட் மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இந்த சாதனங்களை கற்பித்தல் பணிகளுக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
மேலும், டேப்லெட் மூலமாக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் வருகைப் பதிவையும், வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களின் வருகைப் பதிவையும் தினமும் குறிப்பிட்ட நேரத்துக்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இத்தகை வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்பட தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்" என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT