Published : 24 Jul 2024 07:24 PM
Last Updated : 24 Jul 2024 07:24 PM

கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் தேவை: மாநிலங்களவையில் திமுக எம்.பி வலியுறுத்தல்

திமுக எம்பி கனிமொழி என்.வி.என்.சோமு

புதுடெல்லி: “கல்வி நிலையங்களிலும், பணி இடங்களிலும் பெண்களுக்கான அடிப்படை சுகாதாரத் தேவைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றித் தர வேண்டும். அதன் மூலம் பாலினச் சமத்துவத்தையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி என்.வி.என். சோமு வலியுறுத்தி பேசினார்.

மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு புதன்கிழமையன்று சிறப்பு கவன ஈர்ப்பின் மூலம் பேசியது: “இந்தியாவில் உள்ள கல்வி நிலையங்களில் பயிலும் மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணி இடங்களில் உரிய கழிப்பறை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் இல்லை என்ற உண்மையை மிகுந்த மனவேதனைக்கு இடையே இந்த அவையின் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.

கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பெண்களுக்கான வாய்ப்பு அதிகரிக்கும் இந்த நேரத்தில் அந்த இடங்களில் அவர்களுக்கு போதிய அடிப்படை அவசதிகள் இல்லாதது துரதிஷ்டவசமானது. பள்ளிகள் தொடங்கி கல்லூரிகள் வரை வங்கிகள் தொடங்கி பொதுத்துறை அலுவலகங்கள் வரை தினசரி சென்று வரும் லட்சக்கணக்கான மாணவிகள் மற்றும் பெண்கள் பல மணி நேரங்களுக்கு இயற்கை உபாதைகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டிய அவலநிலைதான் இன்றைக்கும் இருக்கிறது.

அமைப்புசாரா தொழிலாளர்களிலும் பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் சூழலில் தனியார் நிறுவனங்களும் கூட குறைந்தபட்ச கழிப்பிட, சுகாதார வசதிகளை செய்துதர மறுக்கின்றன. இது பெண்களின் உடல்நிலையை பாதிப்பது மட்டுமல்ல, அவர்களின் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் பாதிக்கிறது என்பதை இந்த அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். அதுமட்டுமல்ல, இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்ம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் பெண்கள், வேலைக்குச் செல்லவே தயங்கும் நிலையை உருவாக்கியிருக்கிறது என்பதையும் இந்த அரசு கவனிக்க வேண்டும்.

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்று இந்த அரசு பெருமைப்படும் நேரத்தில், இந்த அவலநிலை முட்டாள்தனமானது மட்டுமல்ல, அவமானகரமானதும் கூட.
எனவே எல்லா வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினையை ஈடுபாட்டோடு அணுகி, கல்வி நிலையங்களிலும், பணி இடங்களிலும் பெண்களுக்கான அடிப்படை சுகாதாரத் தேவைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றித் தர வேண்டும். அதன் மூலம் பாலினச் சமத்துவத்தையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x