Published : 24 Jul 2024 05:25 AM
Last Updated : 24 Jul 2024 05:25 AM

அரசு கலை கல்லூரிகளில் முதுகலை படிப்பு; ஜூலை 27 முதல் விண்ணப்பம்: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பில் சேர ஜூலை 27 முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் 85,757 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். இன்னும் நிறைய பேர் சேர்ந்து வருவதால் மொத்த இடங்களில் சேர்க்கை 100 சதவீதத்தை எட்டிவிடும். முதுகலை படிப்புகளில் சேர ஜூலை 27 முதல் ஆக. 7-ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆக.10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக.13-ம் தேதி நடைபெறும்.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக.19-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி நிறைவடையும். ஆக.28-ம் தேதி முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடங்கும். சென்னை பல்கலைக்கழக இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள் நாளைமறுநாள் (வெள்ளி) வெளியிடப்படும்.

பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதிப்பற்றாக்குறை தொடர்பாக விரைவில் துணை வேந்தர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும். 'புதுமைப் பெண்' திட்டத்தின்கீழ் மாதம் தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதன் காரணமாக கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது.

நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கும் ‘தமிழ்ப் புதல்வன்' திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது.எனவே, மாணவர்களும் அதிகஎண்ணிக்கையில் பயன்பெறுவார்கள். இவ்வாறு அமைச்சர் கூறினார். பேட்டியின்போது உயர் கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் உடனிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x