Published : 18 Jul 2024 06:38 PM
Last Updated : 18 Jul 2024 06:38 PM

“அண்ணா பல்கலை. 4 ஆண்டுகளில் உலக அளவில் 200வது இடம் பிடிக்கும்” - துணைவேந்தர் வேல்ராஜ்

படம்: எம். முத்துகணேஷ்

குரோம்பேட்டை: இன்னும் நான்கு ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தை உலக அளவில் 200-வது இடத்துக்கு கொண்டு வர எம்ஐடி கல்லூரி உட்பட உறுப்புக் கல்லூரிகள் சிறந்த பங்களிப்பை அளிக்கும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.

குரோம்பேட்டையில் எம்ஐடி கல்லூரி இயங்கி வருகிறது. இது 1949, ஜூலை 18-ம் தேதி ராஜம் என்பவரால் தொடங்கப்பட்டது. இக்கல்லுாரியின் 75-ம் ஆண்டு விழா இந்தாண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதற்கான விழாவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அரங்கம் மற்றும் போராசியர்கள் அறை கட்ட ரூ.75 கோடி ஒதுக்கப்படும் என்று அவர் கூறினார். அதன்படி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இக்கல்லூரி மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் போன்ற பல தலைவர்களை உருவாக்கியுள்ளது.

இஸ்ரோவின் வளர்ச்சிக்கு எம்ஐடி கல்லூரி நிறைய பங்களிப்பைச் செய்துள்ளது. இக்கல்லூரியின் 75-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தாண்டு சர்வதேச மாநாடு, தேசிய கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், முன்னாள் கல்லுாரி தலைவர், முன்னாள் துணை வேந்தர்கள், முன்னாள் பேராசிரியர்கள், முன்னாள் ஊழியர்கள் உள்ளிட்டோரை கவுரவிக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி நிறுவனர் ராஜம் தபால் தலை மற்றும் 75-ம் ஆண்டு விழா மலர் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் கல்லூரியின் முன்னாள் முதல்வர்கள், பேராசிரியர்கள், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்ஐடி கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் ஏ.டி.பி.டி. தலைவர் வேலுசாமி, ஜே.எஸ்.டபுள்யு. ஸ்டீல் தலைவர் முருகன், டெல்பி டி.வி.எஸ். தலைமை திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மாலை, இன்னிசை கச்சேரி ஆகியவை நடந்தன.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ், ''உலகத்தில் உள்ள சிறந்த பல்கலைக் கழகங்களில் ஒன்றாக இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எம்ஐடி கல்லூரி செய்திருக்கின்ற சாதனைகள் அதிகமானது. பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த பங்களிப்பை எம்ஐடி கல்லூரி அளித்துள்ளது. இன்று எம்ஐடி நிறுவனர் தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விழாவில் முன்னாள் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இன்னும், இரண்டு நாட்கள் எம்ஐடி முன்னாள் மாணவர்கள் சேர்ந்து நிகழ்ச்சிகள் நடத்த உள்ளார்கள். இறுதி நாள் நிகழ்ச்சியில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கலந்து கொள்கிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 4 முக்கிய கேம்பஸ்களில் எம்ஐடி கல்லூரி முக்கியமானது.

அண்ணா பல்கலைக்கழகம் உலக அரங்கிலே 850 ரேங்கிலிருந்து 383 ரேங்கிற்கு வந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் இன்னும் நான்கு வருடத்தில் 50-வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. அப்போது அண்ணா பல்கலையை உலக அளவில் 200 ரேங்கிற்குள் கொண்டு வருவதற்கு எம்ஐடி கல்லூரி உட்பட அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள நான்கு கேம்பஸ்களில் உள்ள கல்லூரிகளும் பாடுபடுவோம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x