Published : 15 Jul 2024 06:10 PM
Last Updated : 15 Jul 2024 06:10 PM
புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க வலியுறுத்தி பள்ளியின் கேட்டை இழுத்து மூடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியை அடுத்த கொத்தபுரிநத்தம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக பல முறை கல்வித் துறைக்கு புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, அனைத்து வகுப்புகளுக்குமே அறிவியல் மற்றும் ஆங்கில ஆசிரியர்கள் இல்லை. கடந்த ஆண்டு மாநில பாடத்திட்டம் நடைமுறையில் இருந்தது. தற்போது சிபிஎஸ்சி பாடத்திட்டத்துக்கு அனைத்து அரசு பள்ளிகளும் மாற்றப்பட்டுள்ளது. இதனால் மாணவ - மாணவியர் பாடங்களை புரிந்து படிக்க முடியாமல் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக தங்களால் படிக்க முடியவில்லை என்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் குற்றம்சாட்டிய மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து பள்ளியின் கேட்டை இழுத்து மூடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய மாணவர்கள் சிலர், “அறிவியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு எந்த வகுப்புக்கும் ஆசிரியர்கள் இல்லை. மாநில பாடத்திட்டமாக இருந்தால் ஆசிரியர்கள் எழுதிப் போடும் பாடங்களை நாங்களே படித்துக் கொள்ள முடியும். ஆனால், சிபிஎஸ்இ பாடத்திட்டம் என்பதால் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தினால் தான் எளிதாக புரிந்துகொள்ள முடியும். சிறுவர்களுக்கு பாடபுத்தகம் இன்னும் வழங்கப்படவில்லை. இவ்வாறு இருந்தால் எப்படி படிப்பது?
அதுமட்டுமல்லாது, பள்ளிக்கு காவலாளி உள்ளிட்ட ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை. இதனால் மாணவ - மாணவியரை வேலை செய்ய அழைக்கின்றனர். எல்கேஜி, யுகேஜி மாணவர்கள் படிக்கும் பள்ளி கட்டிடம் பழுதாகி உள்ளது. கழிவறைகள் சுத்தமாக இல்லை. மதிய உணவில் புழு உள்ளது. இதையெல்லாம் கேட்டால் உரிய நடவடிக்கை இல்லை. ஆசிரியர்களை நியமிக்கக் கேட்டால், ‘வருவார்கள்’ என்று மட்டுமே கூறுகின்றனர். ஆனால், எப்போது வருவார்கள் என்று தெரியவில்லை. நூறு சதவீத தேர்ச்சி வரவேண்டும் என்று கூறினால் மட்டும் போதுமா? போதிய ஆசிரியர்கள் இருந்தால் தான் மாணவர்கள் படித்துத் தேர்ச்சி பெறமுடியும். எனவே, ஆசிரியர் பற்றாக்குறையை போக்க வேண்டும். போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்” என்றனர்.
மாணவர்கள் போராட்டத்தை அறிந்த கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் திருபுவனை போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்குத் திரும்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT