Published : 14 Jul 2024 10:26 AM
Last Updated : 14 Jul 2024 10:26 AM

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. நிதிநிலை பிரச்சினையை போக்க நடவடிக்கை தேவை: பேராசிரியர்கள் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் தீவிரமடைந்து வரும் நிதிநிலைமை பிரச்சினையை போக்க நடவடிக்க எடுக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஏழை மாணவர்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு எல்லோருக்கும் எப்போதும் கல்வி என்ற கொள்கையோடு தொடங்கப்பட்டது தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம். நல்ல நிதி நிலைமையோடு இயங்கி வந்த இப்பல்கலைக் கழகம், தற்போது மோசமான நிதிச் சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலை நீடித்தால் இன்னும் சில மாதங்களில் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத சூழல் ஏற்படக்கூடும். கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்துள்ளது. இதனால், நிதிவரவு மோசமான சரிவை சந்தித்துள்ளது. பல்கலைக் கழகத்தில் பயின்று படிப்பை நிறைவு செய்துள்ள மாணவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சான்றிதழ்கள் சரியாக வழங்கப்படவில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால், மாணவர் சேர்க்கை கட்டாயம் பாதிக்கும்.

பல்கலைக்கழக வளர்ச்சிக்காக பேராசிரியர்கள் தெரிவிக்கும் கருத்துகள், யோசனைகள் எதுவும் நிர்வாகத்தால் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. எனவே, பல்கலைக்கழக குறைபாடுகளை களையவும் நிதிநிலைமையை சரி செய்யவும் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைபாடுகள் சரிசெய்யப்பட்டால் பல்கலைக்கழகம் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி செல்லும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் 28 பேராசிரியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x