Published : 14 Jul 2024 08:03 AM
Last Updated : 14 Jul 2024 08:03 AM
சென்னை: அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டில் இருந்து 15 முதுநிலை மருத்துவ படிப்புகளை நீக்கும் அரசாணையை திரும்பப் பெறுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளதாக மருத்துவர் சங்க செயலாளர் ஏ.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 25 முதல் 30 துறைகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகள் (எம்டி, எம்எஸ்) உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக மீதமுள்ள 50 சதவீத இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கும் 50 சதவீத இடங்களில் 50 சதவீதம் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீத இடங்கள் பொது கலந்தாய்வு மூலம்நிரப்பப்படுகிறது. அரசு மருத்துவர்கள் விரும்பிய துறையில் எம்டி, எம்எஸ் படிப்பை தேர்வு செய்து படித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் தமிழகசுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப் சிங் வெளியிட்ட அரசாணையில், முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இனிமேல், அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டில் பொது மருத்துவம், பொதுஅறுவை சிகிச்சை, குழந்தை நலம், மகப்பேறு, சமூக மருத்துவம், மயக்கவியல் உள்ளிட்ட 10 முதுநிலை படிப்புகள் மட்டும் தான்இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த அரசாணையின்படி காது, மூக்கு, தொண்டை (இஎன்டி), தோல், கண், மனநலம், நீரிழிவு, அவசர மருத்துவம் உள்ளிட்ட 15 துறைகளின் படிப்புகள் நீக்கப்பட்டன. இந்த படிப்புகளை இனி அரசு மருத்துவர்கள் படிக்க பொது கலந்தாய்வில்தான் பங்கேற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
இதற்கு ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், அரசுமருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம், அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதன்தொடர்ச்சியாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் மு.அகிலன் தலைமையிலான நிர்வாகிகள் சுகாதாரத் துறை செயலர் சுப்ரியா சாஹுவை சந்தித்து முறையிட்டனர்.
அதேபோல், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஏ.ராமலிங்கம் தலைமையிலான நிர்வாகிகள் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்தனர். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, “அரசாணையை திரும்பபெற அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கோரிக்கை வைத்தோம். இதையடுத்து, அந்த அரசாணையை திரும்பப் பெறுவதாக அவர் உறுதி அளித்தார். அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT