Published : 12 Jul 2024 07:03 PM
Last Updated : 12 Jul 2024 07:03 PM
புதுடெல்லி: சென்னை ஐஐடி விளையாட்டுத் தொழில்நுட்பத்துக்கான ஸ்டாட்அப் மாநாடு டெல்லியில் இன்று (ஜூலை 12) தொடங்கியது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஐஐடி-ன் உயர்தர விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பு மையம் (Center of Excellence in Sports Science and Analytics - CESSA) மூலம் வழிநடத்தப்படும் இந்த இரண்டு நாள் மாநாடு, இறுதிப் பட்டியலிடப்பட்ட விளையாட்டுத் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களுக்கு முதலீட்டு ஆதரவை வழங்கி, விளையாட்டுத் துறையில் டீப்டெக் ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்கும்.
கிரிக்கெட் பயிற்சி அமர்வுகளை மேம்படுத்தும் வகையில் தனித்துவமான பயன்பாடுகள், இந்தியாவுக்கான தடகள மேலாண்மை அமைப்பு, தனித்துவமான விளையாட்டு கற்றல் தளம் / தொகுதி உருவாக்கம் போன்றவை தொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் தங்கள் வணிக மாதிரியை சிறந்த நடுவர் குழுவின் முன்பு சமர்ப்பிப்பார்கள். இறுதிப் பட்டியலிடப்பட்ட ஸ்டார்ட்அப்களுக்கு சென்னை ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் நிதியுதவி வழங்கி தொழில் ஊக்குவிப்பு பணிகளுக்கு ஆதரவு அளிக்கும். இந்தியாவில் இருந்து புதுமையான சிந்தனைகளுடன் கூடிய குறைந்தபட்சம் 200 விளையாட்டு தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களை அடைவதற்கான உந்துதலை அடுத்த ஐந்து ஆண்டுகளில் சென்னை ஐஐடி வழிநடத்தும்.
இந்த மாநாட்டின் அவசியத்தை எடுத்துரைத்துப் பேசிய சென்னை ஐஐடி-ன் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “விளையாட்டுகளில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், சென்னை ஐஐடி விளையாட்டு மற்றும் தொழில்நுட்பத்தை ஒன்றிணைக்க உறுதிபூண்டுள்ளது. விளையாட்டு தொழில்நுட்பத்திற்கான சந்தை குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்திய விளையாட்டு வீரர்களுக்கு அவர்களின் உடல்நிலையை கண்காணிப்பது முதல் அந்தந்த விளையாட்டுகளில் முன்னேற்றத்தை கண்காணிப்பது வரை உள்நாட்டு தயாரிப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. விளையாட்டுக்கான இம்மாநாடு தனது நோக்கங்களை பூர்த்தி செய்ய சென்னை ஐஐடி மேற்கொண்ட மற்றொரு முயற்சியாகும்” எனத் தெரிவித்தார்.
சென்னை ஐஐடி டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள், ஐஐடி மெட்ராஸ் செஸ்ஸா தலைவர் பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா கூறும்போது, “இம்மாநாடு விளையாட்டுத் துறையில் புதுமைகளை வளர்ப்பதற்கான முக்கிய தளமாக செயல்படுகிறது. தொலைநோக்குப் பார்வை கொண்ட ஸ்டார்ட்அப்களை ஒன்றிணைத்து, முக்கிய ஆதரவை வழங்குவதன் மூலம், இந்தியாவில் விளையாட்டு தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த முன்முயற்சி எங்களின் சிறப்பான நோக்கத்தை செயல்படுத்தும் விதமாக உள்ளது. இந்தியாவின் உலகளாவிய விளையாட்டு முயற்சிகளுக்கும் பங்களிப்பதாக அமைந்திருக்கிறது” என்றார்.
இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குநர் சந்தீப் பிரதான், விளையாட்டு அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் (NCSSR) இயக்குநர் பொறுப்பு மற்றும் தலைவர் டாக்டர் பிபு கல்யாண் நாயக் ஆகியோரும் நிகழ்ச்சியில் உரையாற்றினர்.
இந்தியாவில் பள்ளி உடற்கல்வியில் தொழில்நுட்பப் பயன்பாட்டிற்காக ‘எஜுஸ்வாஸ்த்’ எனப்படும் முன்முயற்சியை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியது. மாணவர்களின் உடற்கல்வி அமர்வுகளின்போது அவர்களைப் பற்றிய துல்லியமான, விரிவான தரவுகளைப் பதிவு செய்யும் விதமாக செயல்படக்கூடிய புதுமையான மற்றும் சிக்கனமான ‘ஐபி’ வன்பொருள் தீர்வுகளை வழங்குகிறது. வன்பொருள், ஐஓடி முறையில் இயங்கும் தயாரிப்புகள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் ஆகியவற்றின் தடையற்ற ஒருங்கிணைப்பை கொண்டுள்ளது. மேலும், பல்வேறு நிலைகளில் அணுகல்-சமநிலை தனியுரிமை மற்றும் மேம்பாட்டு இலக்குகளுடன் மாணவர்களின் உடற்கல்வி செயல்திறனை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் முடியும்.
தொழில்நுட்பத்துடன் விளையாட்டு வீரர்களின் செயல்திறனை மேம்படுத்துதல், சரியான விளையாட்டு ஊட்டச்சத்தின் பின்னணியில் உள்ள அறிவியல், சாதாரண நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களை ஆதரிப்பதற்கான தொழில்நுட்பம், பாரா-விளையாட்டு வீரர்களை ஆதரிப்பது, விளையாட்டில் கேமிஃபிகேஷன் போன்றவை குறித்தும் இந்த மாநாட்டில் குழு விவாதங்கள் இடம்பெறும். இதுபோன்ற அம்சங்களில் விளையாட்டு தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களுக்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்படும்.
டிஜிட்டல் கற்றல் தொகுதிகள், விளையாட்டு சார்ந்த அம்சங்கள், மாணவர்களின் நல்வாழ்வு மற்றும் தடகள மேம்பாட்டிற்கான முழுமையான அணுகுமுறையை வழங்குவதற்கான விரிவான பகுப்பாய்வுத் தொகுப்பை ஒருங்கிணைப்பதை “எஜுஸ்வாஸ்த்” முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் நிலைத்தன்மை, அளவிடுதல் ஆகியவற்றை உறுதி செய்வதற்காக ஸ்பான்சர்கள், பொது மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், விளையாட்டு சார்ந்த கூட்டுமுயற்சிகள் மற்றும் நீண்ட கால உறவுகளை உருவாக்கவும் இம்மாநாடு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ‘எஜுஸ்வாஸ்த்’-ன் முக்கிய நோக்கங்கள் வருமாறு:
• இந்தியாவில் உடற்கல்விக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அணுகுமுறை
• ஒருங்கிணைந்த கண்காணிப்புத் தீர்வுகள்
• நிகழ்நேரப் பகுப்பாய்வுக்கான செலவு குறைந்த தொழில்நுட்பம்
• நீண்டகால உத்திசார் கூட்டாண்மைகளை உருவாக்குதல்
• எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் ஹெல்த் மற்றும் விளையாட்டுப் பயன்பாட்டை உருவாக்குதல்
இந்திய விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்புக்கு பயனளிக்கும் வகையில் NCSSR (இந்திய விளையாட்டு ஆணையத்தின் விளையாட்டு அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையம்) உடன் இணைந்து இதுபோன்ற வருடாந்திர நிகழ்வுகளை ஐஐடி மெட்ராஸ் செஸ்ஸா கவனித்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்-அப்களுக்கான ஐஐடிஎம்மின் அறிவுசார் மற்றும் தொழில் இணைப்புகளைப் பயன்படுத்துதல், NCSSR-க்கான தயாரிப்பு மேம்பாடு, ஐஐடிஎம் செஸ்ஸா- NCSSR ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு ஆலோசனை முயற்சிகள் மூலம் அறிவுப் பகிர்வு மற்றும் பரப்புதலில் ஈடுபடுதல், அடையாளம் காணப்பட்ட திட்டத்தில், ஏஐ, எம்எல் போன்ற ஆழமான தொழில்நுட்பத் துறைகளில் ஐஐடிஎம்-மின் நிபுணத்துவத்தை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
NCCSR கவனம் செலுத்தும் அம்சங்களில் விளையாட்டுத் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் வாய்ப்புகளுக்கும் ஆதரவு வழங்கப்படும். இந்திய அரசு கவனம் செலுத்தி முன்னுரிமை அளித்துவரும் விளையாட்டு தொழில்நுட்பத்தில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் சந்தை ஆய்வு முயற்சிகளுக்கு ஐஐடிஎம் செஸ்ஸா மற்றும் என்சிஎஸ்எஸ்ஆர் ஆகியவை இணைந்து பணியாற்றும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT