Published : 12 Jul 2024 04:35 AM
Last Updated : 12 Jul 2024 04:35 AM
சென்னை: அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசுமருத்துவர்களுக்கான 50 சதவீதஒதுக்கீட்டை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என அதிமுகபொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழக அரசு, அரசுப் பணியிலுள்ள மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான ஒருசில பாடப் பிரிவுகளை தவிர மற்ற பிரிவுகளுக்கான சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்துள்ளது. இது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த நடவடிக்கை, அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான வாய்ப்புகளைப் பறிக்கும் ஒருமோசமான செயலாகும். இதன்மூலம் திமுக அரசு, மத்திய அரசின் வேலை வாய்ப்பு ஒழிப்பு கொள்கைகளை எதிர்ப்பதாக கூறி மக்களிடம் கபட நாடகம் ஆடுவது வெளிப்பட்டுள்ளது.
இந்த சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்வதோ அல்லது மாற்றம் செய்வதோ ஏற்கத்தக்கதல்ல. இது மருத்துவப் பட்டமேற்படிப்புகளை படிக்க விரும்பும் அரசுப் பணியிலுள்ள மருத்துவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும். எனவே உடனடியாக சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்த அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேற்படிப்புகளுக்கான மாணவர்சேர்க்கையில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடப்பாண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் பொது மருத்துவம், பொதுஅறுவை மருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறு, எலும்பியல், மயக்கவியல், நெஞ்சகம், ஊடுகதிரியல், சமூக மருத்துவம், தடயவியல் ஆகியவற்றை தவிர்த்து, மீதமுள்ள 15 மருத்துவமேற்படிப்புகளில் 50 சதவீதஇட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இனி தேவைக்கேற்ப.. அதேபோல இனிவரும் ஆண்டுகளில் தேவைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும், இட ஒதுக்கீடு வழங்கப்படும் துறைகளில் கூட 50சதவீத ஒதுக்கீடு செய்யாமல் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள சில குறிப்பிட்ட துறை மருத்துவர்கள் போதிய எண்ணிக்கையில் இருப்பதால், அத்துறைகளில் மட்டும் அரசு மருத்துவர் ஒதுக்கீட்டை நிறுத்தி வைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் திறமையான வல்லுநர்கள்அதிக அளவில் இருப்பதற்கு காரணம் 50 சதவீதஅரசு மருத்துவர்களின் இட ஒதுக்கீடுதான். எனவே, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீதஒதுக்கீட்டை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோன்று, அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிட்ட அரசாணையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என பல்வேறு மருத்துவ சங்கங்களும் வலியுறுத்தியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT