Last Updated : 10 Jul, 2024 02:27 PM

 

Published : 10 Jul 2024 02:27 PM
Last Updated : 10 Jul 2024 02:27 PM

பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு: ஜூலை 22-ல் கலந்தாய்வு தொடக்கம்

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் இன்று வெளியானது. இந்நிலையில், தகுதியான மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22-ம் தேதி முதல் தொடங்குகிறது.

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 6-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 12-ம் தேதி நிறைவடைந்தது. ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 53,954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் 1 லட்சத்து 99,868 விண்ணப்பங்கள் தகுதி உள்ளதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தரவரிசை வெளியிடப்பட்டது. தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் ஆணையர் வீரராகவ ராவ் பொறியியல் மாணவச் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை கிண்டியில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று வெளியிட்டார்.

அதன்படி, பொது பிரிவினருக்கான தரவரிசை பட்டியலில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த தொசிதா லட்சுமி என்ற மாணவி முதலிடத்தையும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த நிலஞ்சனா என்ற மாணவி இரண்டாம் இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோகுல் என்ற மாணவர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். அதேபோல் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராவினி என்ற மாணவி முதலிடத்தையும், கோயமுத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த கிருஷ்ணா அனுப் இரண்டாம் இடத்தையும், வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த சரவணன் என்ற மாணவர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்த ஆண்டு பொறியியல் தரவரிசை பட்டியலில் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்ணை 65 மாணவர்கள் பெற்றுள்ளனர். இதில், 58 பேர் மாநில பாடப்பிரிவுகளிலும் 7 பேர் இதர பாடப்பிரிவுகளிலும் படித்தவர்கள். இதையடுத்து பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22 -ம் தேதி தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி வரை மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. மேலும், கல்லூரிகள் மற்றும் அதில் உள்ள இடங்களில் எண்ணிக்கை ஜூலை 15-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x