Published : 10 Jul 2024 05:19 AM
Last Updated : 10 Jul 2024 05:19 AM
சென்னை: பரஸ்பரம் பேசி மனமொத்த மாறுதல் பெற விரும்பும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நாளைக்குள் (ஜூலை 11) விண்ணப்பிக்க வேண்டுமெனபள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவிதமான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் இணையதளம் வழியாக கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பொது மாறுதல் கலந்தாய்வு நிறைவுபெற்ற பின்னர் ஆசிரியர்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் சிலர் கூறியதாதவது: ஆசிரியர்கள் தங்களுக்குள் பரஸ்பரமாக பேசிபணியிடங்களை மாற்றிக் கொள்ளும் முறை மனமொத்த மாறுதல் என்று அழைக்கப்படும். அதன்படி நடப்பாண்டு மனமொத்த மாறுதலில் செல்ல விரும்பும் ஆசிரியர்களுக்கான விண்ணப்பப் பதிவுஎமிஸ் தளத்தில் நேற்று தொடங்கியது. விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் நாளை மாலையுடன் நிறைவு பெறுகிறது.
இதற்கு 2 ஆண்டுகளில் ஓய்வுபெறவுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்க இயலாது. அதேபோல், ஏற்கெனவே மனமொத்த மாறுதல்பெற்று 2 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேறு துறைக்கு மனமொத்த மாறுதல் பெற முடியாது. இந்த வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்களை ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
தொடர்ந்து தகுதியான நபர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஒன்றிய மற்றும் கல்வி மாவட்ட அளவில் ஆகஸ்ட் 1-ம் தேதியும், வருவாய் மாவட்டம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும் வகையில் ஆகஸ்ட் 2-ம் தேதியும் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.
இதேபோல், பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு ஜூலை 11-ம் தேதிக்கு பதிலாக 12-ம் தேதி நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT