Published : 05 Jul 2024 09:10 PM
Last Updated : 05 Jul 2024 09:10 PM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடரும் நிர்வாக சீர்கேட்டால் நடப்பாண்டும் இதுவரை மூன்றாம் ஆண்டு பி.காம், பிஏ, பி.எஸ்.சி உட்பட பட்டப்படிப்பு இறுதி செமஸ்டர் விடைத்தாள் திருத்தும் பணிகள் கூட தொடங்காத நிலையில், எம்.காம், எம்ஏ, எம்.எஸ்.சி பாடப் பிரிவுகளின் சேர்க்கை நடைபெற்று வருவதால் மாணவ, மாணவியர்கள் அவர்களின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் 10-க்கும் மேற்பட்டவைகள் இயங்கி வருகிறது. இக்கல்லுாரிகளில் சுமார் 4 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பி.காம், பிஏ., பி.எஸ்.சி., உட்பட பட்டப்படிப்புகள் படித்து வருகின்றனர். இந்தாண்டும் புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாக சீர்கேட்டால் காலதாமதமாக கடந்த மாதம் பி.காம், பிஏ, பிஎஸ்சி இறுதியாண்டு தேர்வு நடந்து முடிந்தது.
இதுவரை மாணவர்கள் எழுதிய செமஸ்டர் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கிடையில் சில கல்லூரிகளில் பட்டமேற்படிப்பு பாடப்பிரிவுக்கு சேர்க்கைக்காண விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகின்றன. இதனைக் கண்டு பெற்றோர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இது குறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறியதாவது: "புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. பல்கலைக்கழகத்தின் நிர்வாக சீர்கேடு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக இந்தாண்டு பி.காம் மற்றும் பிஎஸ்சி உட்பட பட்டப்படிப்புகளின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு முடிந்துள்ள நிலையில், இதுவரை விடைத்தாள் திருத்தும் பணிகள் கூட தொடங்கப்படாமல் உள்ளது. இதற்கு பிறகுதான் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதற்கு இன்னும் எத்தனை மாதங்கள் ஆகும் என்று தெரியவில்லை. சில கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கான அட்மிஷன்கள் முடிந்து வகுப்புகள் தொடங்கும் நிலையில் உள்ளன.
அதேபோல் அண்டை மாநிலமான தமிழகத்திலும் அனைத்து வகுப்புகளுக்கும் அட்மிஷன்கள் முடிந்து வகுப்புகள் நடந்து வருகிறது. ஆனால் புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை பட்டப்படிப்பு தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. தேர்ச்சி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் ஒரு சில மாணவர்கள் மேல் படிப்பில் பணத்தை கட்டி சேர்ந்துவிட்டனர். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.
இவர்களுக்கு தேர்வு முடிவுகள் வந்தபிறகு எந்த கல்லுாரிகளுக்கு செல்வார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. பல்கலைக் கழகம் அலட்சியத்தால் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் முதுநிலைகல்வி கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் உயர்கல்வித்துறை முறையாக செயல்படுகிறதா என்றும் தெரியவில்லை.
கல்வித்துறையை உருகுலைந்த நிலையில் உள்ளது. எனவே இந்த விஷயத்தில் புதுச்சேரி ஆளுநர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதுடன், விரைவாக தேர்வு முடிவுகளை வெளியிட்டு மாணவர்களின் எதிர்காலத்தை காக்க வேண்டும்." என பெற்றோர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT