Published : 02 Jul 2024 06:37 PM
Last Updated : 02 Jul 2024 06:37 PM

தேசிய நல்லாசிரியர் விருதுக்கான சுய பரிந்துரைகளை ஜூலை 15 வரை அனுப்பலாம்

கோப்புப் படம்

புதுடெல்லி: தேசிய நல்லாசிரியர் விருதுக்கான சுய பரிந்துரைகளை ஜூலை 15 வரை அனுப்பலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2024-க்கு தகுதியான ஆசிரியர்களிடமிருந்து ஆன்லைன் சுய பரிந்துரைகள் ஜூன் 27 தேதி முதல் கல்வி அமைச்சகத்தின் இணையதளத்தில் http://nationalawardstoteachers.education.gov.in வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆன்லைன் பரிந்துரைகளைப் பெறுவதற்கான கடைசி தேதி ஜூலை 15 ஆகும். இந்த ஆண்டு, மாவட்ட, மாநில, தேசிய அளவில், மூன்று கட்ட தேர்வு செயல்முறை மூலம், 50 நல்லாசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த விருது செப்டம்பர் 5-ம் தேதி புதுடெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும்.

கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று, அதாவது செப்டம்பர் 5-ம் தேதி வெளிப்படையான மற்றும் ஆன்லைன் தேர்வு செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. இதற்காக தேசிய அளவிலான ஒரு விழாவை ஆண்டு தோறும் ஏற்பாடு செய்து வருகிறது.

நாட்டின் மிகச் சிறந்த ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பைக் கொண்டாடுவதும், தங்கள் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பின் மூலம் பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல் மாணவர்களின் வாழ்க்கையை வளப்படுத்திய அந்த ஆசிரியர்களைக் கவுரவிப்பதும் தேசிய நல்லாசிரியர்கள் விருதின் நோக்கமாகும்.

தகுதி நிபந்தனைகள்: மாநில அரசு / யூனியன் பிரதேச நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில / யூனியன் பிரதேச வாரியத்துடன் இணைந்த தனியார் பள்ளிகளால் நடத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளித் தலைவர்கள் இந்த விருதுக்கு தகுதியுடையவர்கள்.

மத்திய அரசு பள்ளிகள், அதாவது கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள், பாதுகாப்பு அமைச்சகம் நடத்தும் சைனிக் பள்ளிகள், அணுசக்தி கல்வி சங்கம் நடத்தும் பள்ளிகள், பழங்குடியினர் விவகார அமைச்சகத்தால் நடத்தப்படும் ஏகலைவா மாதிரி குடியிருப்பு பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மற்றும் இந்திய பள்ளிகள் சான்றிதழ் தேர்வு கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) ஆகியவற்றுடன் இணைந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தகுதியுடையவர்கள் ஆவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x