Published : 02 Jul 2024 05:55 PM
Last Updated : 02 Jul 2024 05:55 PM
விருதுநகர்: அடிப்படை வசதிகள் இல்லாமலும், போதிய ஆசிரியர்கள் இல்லாமலும் தவித்து வரும் சிவகாசி அருகே நாரணாபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியின் மாணவர்கள் இது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நாரணாபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 6 முதல் பிளஸ் 2 வரை உள்ள இப்பள்ளியில் சுமா் 800 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் போதிய அடிப்படை வசதி இல்லாமலும், ஆசிரியர்கள் இல்லாமலும் மாணவர்கள் தவித்து வருகின்றனர். இதனால், அரசு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்களுடனேயே மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்குமாறும், காலிப் பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்கக் கோரியும் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து அந்த மாணவர்கள் முறையிட்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ''எங்கள் பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாக ஆங்கில ஆசிரியர் இல்லை. இதனால், ஆங்கிலப் பாடம் படிப்பதில் மிகுந்த சிரமம் உள்ளது. தேர்ச்சி மதிப்பெண் பெறுவதற்கே சிரமப்படுகிறோம். அதோடு, பள்ளியில் போதிய கழிப்பறை வசதி இல்லை. இருக்கும் கழிப்பறையில் கதவு இல்லை. தண்ணீர் வசதி இல்லை. கழிப்பறையை சுத்தம் செய்யாததால் வகுப்பறை வரை துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வகுப்பறைகளில் அமர்ந்து படிக்க முடியவில்லை. குடிநீர் வசதியும் இல்லை. குடிநீர் தொட்டியும் மிக அசுத்தமாக உள்ளது. இதனால் எங்களுக்கு வயிற்று உபாதைகள் ஏற்படுகிறது.
பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கிடையாது. குடியரசு தின விழாவுக்குக்கூட மாணவர்களை பள்ளிக்கு வர வேண்டாம் என தலைமை ஆசிரியர் கூறிவிட்டார். மரத்தடியில் வகுப்பறைகள் நடக்கின்றன. இதனால் உடல் சூடு ஏற்பட்டு மாணவ - மாணவியர் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, எங்கள் பள்ளியில் அடிப்படை வசிகளை ஏற்படுத்திக் கொடுத்து, போதிய ஆசிரியர்களையும் பணியமர்த்த வேண்டும்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT