Published : 21 Jun 2024 10:29 PM
Last Updated : 21 Jun 2024 10:29 PM
புதுடெல்லி: முறைகேடு புகார் எதிரொலியாக யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது சிஎஸ்ஐஆர் நெட் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெருவதற்கான தகுதியைத் தீர்மானிப்பதற்கான யுஜிசி நெட் தேர்வு நாடு முழுவதும் இரண்டு ஷிப்ட்களாக கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) நடைபெற்றது.
தேர்வு முடிந்த மறுநாளே, நெட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் வந்திருப்பதாகவும், இதனால் மத்திய கல்வி அமைச்சகமும், மத்திய அரசும் இணைந்து இந்த ஆண்டுக்கான நெட் தேர்வை ரத்து செய்வது என முடிவு செய்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த முறைகேடுகள் குறித்த விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்தது.
முன்னதாக சில அறிவியல் பாடங்களுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு வரும் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியான இரண்டு நாளில், சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை இன்று (ஜூன் 21) அறிவித்துள்ளது.
மேலும் சில தவிர்க்க முடியாத காரணங்கள் மற்றும் தளவாட சிக்கல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NTA postponed the Joint CSIR-UGC-NET Examination June 2024 which was scheduled to be held between June 25 to 27. It is being postponed due to unavoidable circumstances as well as logistic issues. The revised schedule for the conduct of this examination will be announced later… pic.twitter.com/cJknD7OHBb
— ANI (@ANI) June 21, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT