Last Updated : 17 Jun, 2024 09:48 PM

 

Published : 17 Jun 2024 09:48 PM
Last Updated : 17 Jun 2024 09:48 PM

3 ஆண்டுகளில் பள்ளி மாணவிகளுக்கு 7.74 கோடி பாக்கெட் சானிட்டரி நாப்கின் வழங்கல்: தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் பள்ளி மாணவிகளுக்கு ரூ.7.74 கோடி பாக்கெட்டு சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.115 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை கடந்த 2011-ம் ஆண்டு தமிழக அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளில் பருவமடைந்த மாணவிகள், பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. 10 வயது முதல் 19 வயது வரையிலான மாணவிகள் 43 லட்சம் பேர் ஆண்டுதோறும் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.

ஒரு மாணவிக்கு ஆண்டுக்கு 18 பாக்கெட்டுகள் சானிட்டரி நாப்கின் வழங்கப்படுகின்றன. ஒரு பாக்கெட்டுக்கு 6 நாப்கின்கள் வீதம் விநியோகம் செய்யப்படுகிறது. அதேபோல், பயன்படுத்திய நாப்கின்களை அப்புறப்படுத்துவதற்கான இயந்திரமும் பள்ளி வளாகங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில், “வளரிளம் பருவத்தில் உள்ள மாணவிகளின் சுகாதாரத்தை பேணும் வகையில் இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலமாக லட்சக்கணக்கான மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த பெண்களுக்கும் இலவசமாக நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலமாக நாப்கின்கள் கொள்முதல் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இதற்காக ரூ.115 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் பள்ளி மாணவிகளுக்கு 7.74 கோடி பாக்கெட்டு சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்புள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x