Last Updated : 14 Jun, 2024 08:00 PM

 

Published : 14 Jun 2024 08:00 PM
Last Updated : 14 Jun 2024 08:00 PM

தமிழக அரசு பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உயர் கல்வி வழிகாட்டி பாடவேளை அறிமுகம்

சென்னை: அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி வகுப்பு வாரந்தோறும் 40 நிமிடங்கள் தனி பாடவேளையாக நடத்தப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது. தற்போது 2024-25-ம் கல்வியாண்டு நாள்காட்டியில் குறிப்பிட்டுள்ளவாறு 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேட்டில் தரப்பட்டுள்ள பாடப்பொருள் சார்ந்த வகுப்புகள் நடத்துவதற்கான பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேபோல், அந்த பாடவேளைகளில் கற்பிக்கப்பட வேண்டிய பாடங்கள் சார்ந்த பாடத்திட்டம் வாரம் வாரியாக இடம் பெற்றுள்ளது. இந்த பாடத்திட்டங்களை உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் உடனே வழங்க வேண்டும். இந்த வகுப்புகள் பள்ளியில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் நடத்தப்பட வேண்டும்.

உயர் கல்வி வழிகாட்டுதல்கள் வழங்க பள்ளிகளுக்கு அழைத்து வரப்படும் துறை சார்ந்த வல்லுநர்கள் ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வகுப்புகள் முறையாக நடைபெறுகிறதா, மாணவர்கள் பயன் பெறுகின்றனரா என்பதை அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பார்வையிட வேண்டும்.

பள்ளிகளில் இந்த தனி பாடவேளைக்காக மாதந்தோறும் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 9 மற்றும் 11-ம் வகுப்புக்கு வாரந்தோறும் புதன்கிழமையும், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமையும் மதியம் ஏதேனும் ஒரு பாடவேளையில் இந்த வகுப்புகள் நடைபெறும்.

அந்த வகுப்புகளில் சட்ட வடிவமைப்பு, உடல்நலன், சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், இந்திய மருத்துவம், கட்டுமானம், மின்னணுவியல், விமான போக்குவரத்து, வேளாண்மை, மீன்வளம், ஜவுளித் தொழில்நுட்பம் என உயர்கல்வியில் பல்வேறு படிப்புகள் சார்ந்த விளக்கங்கள் அளிக்கப்படவுள்ளன. இது தவிர வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x