Published : 14 Jun 2024 05:20 AM
Last Updated : 14 Jun 2024 05:20 AM
புதுடெல்லி: நீட் தேர்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (NEET - நீட்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை (என்டிஏ) இத்தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு 571 நகரங்களில் கடந்த மே 5-ம் தேதி நடத்தப்பட்டது. கடந்த ஜூன் 4-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.
இதற்கிடையே, ‘சில மாநிலங்களில் தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்துள்ளது. சில மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். சிலருக்கு அதிக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறுபல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால், மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் சில மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, ‘நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளிக்கப்பட்டது குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது’ என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்தது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையில், மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியதாவது:
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் அளிக்கப்பட்டதன் மூலம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்க்கை உறுதிசெய்யப்பட்ட 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அவர்களுக்கு ஜூன் 23-ம் தேதி மறுதேர்வு நடைபெறும். ஒருவேளை, மறுதேர்வில் பங்கேற்கவிரும்பாவிட்டால், கருணை மதிப்பெண் நீங்கலாக ஏற்கெனவே நீட் தேர்வில் அவர்கள் பெற்றிருந்த மதிப்பெண் வழங்கப்படும். மறுதேர்வு முடிவுகள் ஜூன் 30-ல் வெளியிடப்படும். மருத்துவ கலந்தாய்வு ஜூலை 6 முதல் நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவரது வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
இந்நிலையில், நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்றதாக அறிவிக்கப்பட்ட 67 பேரில் 6 பேர், கருணை மதிப்பெண் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 6 பேரும் ஹரியாணாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள். இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்கள். கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த 6 பேரின் பெயர்கள் முதல் மதிப்பெண் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால், நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 67-ல் இருந்து 61 ஆக குறைந்துள்ளது.
வினாத்தாள் கசிவு பொய்யான குற்றச்சாட்டு: மத்திய அமைச்சர் பிரதான் விளக்கம்
நீட் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கூறியதாவது: நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்து முறைகேடு நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. தேசிய தேர்வு முகமை மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது. தேசிய தேர்வு முகமை நம்பத்தகுந்த அமைப்பாகும். இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
நீதிமன்றத்தின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். இதனால் எந்த ஒரு மாணவரும் பாதிக்கப்படாத வகையில் மாற்று வழிமுறை உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT