Published : 12 Jun 2024 12:30 PM
Last Updated : 12 Jun 2024 12:30 PM
சென்னை: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 3,296 தற்காலிக பணியாளர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான ஆணையை பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன், அனைத்து மாவட்டக் கருவூலக அலுவலகங்களுக்கும் அனுப்பிய கடித விவரம்: "தமிழகத்தில் 2009-10 மற்றும் 2011-12-ம் கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 2,064 பட்டதாரி ஆசிரியர்கள், 344 உடற்கல்வி ஆசிரியர்கள், 544 ஆய்வக உதவியாளர்கள், 344 இளநிலை உதவியாளர்கள் என மொத்தம் 3,296 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டன.
இவை தற்காலிக பணியிடங்களாக இருப்பதால் அதில் பணியாற்றும் நபர்களுக்கு அவ்வப்போது தொடர் பணி நீட்டிப்பு ஆணை வெளியிடப்பட்டு சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குவதற்கான கருத்துரு தற்போது தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது. இதையடுத்து இந்த 3,296 தற்காலிக பணியிடங்களுக்கும் வரும் ஆகஸ்ட் மாதம் வரை ஊதியம் தருவதற்கான கொடுப்பாணை அளிக்கப்படுகிறது. எனவே, சார்ந்த அலுவலர்கள் சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும் போது, அதை ஏற்று ஊதியம் வழங்கப்பட வேண்டும்." இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT