Published : 11 Jun 2024 05:54 AM
Last Updated : 11 Jun 2024 05:54 AM
சென்னை: கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதல் நாளிலேயே இலவச பாடப்புத்தகமும், நோட்டும் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிந்து ஏப்ரல் 24 முதல் கோடைவிடுமுறை விடப்பட்டது. அதைத்தொடர்ந்து விடுமுறை முடிந்துபள்ளிகள் ஜுன் 6-ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டு ஜூன் 10-ம் தேதி பள்ளிகள் திறக்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன்படி, பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள்மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், ஏற்கெனவேஅறிவித்தபடி, கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு இனிப்பு வழங்கி ஆசிரியர்களும் அலுவலக பணியாளர்களும் வரவேற்றனர். பல பள்ளிகளில்பூங்கொத்து கொடுத்தும், பேண்ட்வாத்தியம் முழங்கியும் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் நாளிலேயே இலவச பாடப்புத்தகங்களும், நோட்டுகளும் வழங்கப்பட்டன. ஆலந்தூர் ஏ.ஜே.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவ , மாணவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் வரவேற்று பாடப்புத்தகங்களையும், நோட்டுகளையும் வழங்கினர். அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை நன்கு படித்து படிப்பிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குமாறு அறிவுரை கூறினர்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: நீண்ட விடுமுறை முடிந்து பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவ,மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கோடை விடுமுறை முடிந்துபள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன். பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை - உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் மாணவர்களுக்கு வாழ்த்துதெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT