Published : 01 Jun 2024 06:15 AM
Last Updated : 01 Jun 2024 06:15 AM
சென்னை: சென்னை ஐஐடி ஆன்லைன் பிஎஸ் டேட்டா சயின்ஸ் பட்டப்படிப்பின் முதலாவது பட்டமளிப்புவிழாவில் 177 பேர் பட்டம் பெற்றனர். சென்னை ஐஐடி பிஎஸ் டேட்டா சயின்ஸ்மற்றும் அப்ளிகேஷன்ஸ், பிஎஸ் எலெக்ட்ரானிக் சிஸ்டம் ஆகிய இரு ஆன்லைன் பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது.
இந்த 4 ஆண்டு கால படிப்புகளில் சேரும் மாணவர்கள் குறிப்பிட்ட பாடங்களை படித்து முடிக்கும் காலத்துக்கு ஏற்ப அவர்களுக்கு ஃபவுண்டேஷன், டிப்ளமா, பிஎஸ்சி, பிஎஸ் என வெவ்வேறு நிலைகளில் பட்டம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட பிஎஸ் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் படிப்பின் முதலாவது பட்டமளிப்பு விழா ஐஐடியில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில் 177 பேர் பிஎஸ் பட்டம்பெற்றனர். அவர்களுக்கு ஐஐடி முன்னாள்மாணவரும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் தலைமைச் செயல் அலுவலருமான நளினிகாந்த் கோலகுண்டா பட்டங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
அவர் பேசும்போது, இந்த ஆன்லைன் படிப்பில் ஐஏஎஸ் அதிகாரி, இருதய மருத்துவர்கள் என பலதரப்பட்டோரும் சேர்ந்து படிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் இப்படிப்பு, தரத்தை சிறிதும் சமரசம் செய்யாமல் கல்வியை ஜனநாயகப்படுத்தியுள்ளது. டேட்டா சயின்ஸ் படித்தவர்களை பணியில் அமர்த்த ஏராளமான நிறுவனங்கள் காத்திருக்கின்றன. கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஆர்வமும், விருப்பமும் இருந்தால்போதும் யார் வேண்டுமானாலும் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கலாம். என்று குறிப்பிட்டார்.
இவ்விழாவில், 3 ஆண்டுடன் இந்த ஆன்லைன் படிப்பை நிறுத்திக்கொண்ட 26 பேருக்கும், தொடர்ந்து இறுதி ஆண்டு படிப்பை தொடரும் 120 பேருக்கும் பிஎஸ்சி பட்டம் வழங்கப்பட்டது .மேலும் 122 பேர் டிப்ளமா பட்டம் பெற்றனர். டீன் (கல்வி) பிரதாப் ஹரிதாஸ் வாழ்த்திப் பேசினார்.
பிஎஸ் படிப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆண்ட்ரூ தங்கராஜ் பேசும்போது, பிஎஸ் டேட்டா சயின்ஸ் பட்டதாரிகள் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பை தொடர உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்றார். முன்னதாக, டீன் (முன்னாள் மாணவர் நலன் மற்றும் பெருநிறுவன உறவுகள்) மகேஷ் பஞ்சனுல்லா வரவேற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT