Published : 31 May 2024 05:59 AM
Last Updated : 31 May 2024 05:59 AM

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது: ‘உயர்வுக்கு உயர் கல்வி’ நிகழ்வில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

மயில்சாமி அண்ணாதுரை, வி.டில்லிபாபு

சென்னை: விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது என்று விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ ஆன்லைன் தொடர் வழிகாட்டி நிறைவு நிகழ்வில் இஸ்ரோ முன்னாள் இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ என்ற நிகழ்ச்சி ஆன்லைன் வழியாக நடைபெற்றது. இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் கல்லூரி, சவீதா இன்ஜினீயரிங் கல்லூரி, ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்கின.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஆன்லைன் வழிகாட்டி நிறைவு நிகழ்வில் ‘ஏரோ ஸ்பேஸ் & டிஃபென்ஸ்: தமிழக இளைஞர்களுக்கான வாய்ப்புகள்' எனும் தலைப்பில் மயில்சாமி அண்ணாதுரையும், நிகழ்வை ஒருங்கிணைத்த ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபுவும் கலந்துரையாடினார். அவர்கள் பேசியதாவது:

டில்லிபாபு: விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் நிலை என்ன? இதனால் மக்களுக்கு கிடைத்த பலன் என்ன?

மயில்சாமி அண்ணாதுரை: விண்வெளி ஆராய்ச்சியை தாமதமாக தொடங்கினாலும், இந்தியா சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. செயற்கைக் கோள்கள் தரும் பல்வேறு தரவுகள் நாட்டுக்கும், மக்களுக்கும் பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக, மண்ணின் வளம், நீரின் தன்மை, தடுப்பணை, பயிர்களின் வளர்ச்சி என வேளாண் துறைக்கு பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன. மேலும், ஓசோனில் துளை ஏற்பட்டதையும், சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் சுட்க்காட்டியதும் செயற்கைக்கோள்கள்தான். அவை தரும் படங்கள் மூலமாகத்தான், நம்மால் பலவற்றை திட்டமிட்டுச் செய்ய முடிகிறது. செய்திப் பரிமாற்றம், கல்வி, சுகாதாரம், இடம் அறிதல், பருவநிலை மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் விண்வெளி ஆராய்ச்சிகள் மிகுந்த பயனை அளிக்கின்றன.

வி.டில்லிபாபு: விண்வெளி துறையில் சாதிக்க வேண்டுமென விரும்புவோருக்கான வேலைவாய்ப்புகள் எப்படி உள்ளன?

மயில்சாமி அண்ணாதுரை: விண்வெளி துறையில் படித்து, பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம். விண்வெளி ஆராய்ச்சியைக் கற்றுத்தரும் பேராசிரியராக மாறலாம். ஏவுகணை, செயற்கைக்கோள் உருவாக்கத்தில் பங்களிப்பது, தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு வரும் தரவுகளைக் கொண்டு மக்களுக்கு நன்மை செய்வது என பல பணிகளைச் மேற்கொள்ளலாம். இஸ்ரோ, டிஆர்டிஓ, ஏர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம். இந்தியாவுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் செயற்கைக்கோள்களை உருவாக்கித் தரும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம். இந்திய விண்வெளித் துறையிலேயே எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன்கள் வந்துள்ளன. இவற்றின் பயனும் அதிகரித்து வருகிறது.

வி.டில்லிபாபு: வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் தமிழகத்தில் என்னென்ன சிறப்புத் திட்டங்கள் உள்ளன?

மயில்சாமி அண்ணாதுரை: ஏரோஸ்பேஸ் செக்டர் டிஃபென்ஸ் மையங்கள் உத்தர பிரதேசம் மற்றும் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் உள்ளமையம் மிகவும் முக்கியமானது. விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான பல்வேறு மையங்களான ஸ்ரீஹரிகோட்டா, பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகியவை தமிழகத்தைச் சுற்றியே அமைந்துள்ளன. இவை தவிர, இஸ்ரோ, டிஆர்டிஓ போன்றவற்றுக்குத் தேவையான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் தனியார் நிறுவனங்களும் உள்ளன.

நிகழ்வின் நிறைவாக, மாணவர்களின் கேள்விகளுக்கு மயில்சாமி அண்ணாதுரை பதில்களை அளித்தார் .இந்த நிகழ்வில் பங்கேற்க தவறியவர்கள் https://www.htamil.org/UUKE16 என்ற லிங்க்-ல் பார்த்து பயனடையலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x