Published : 29 May 2024 03:49 PM
Last Updated : 29 May 2024 03:49 PM
சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் ‘செயல் விளக்க நாள்’ நிகழ்வை கல்வி நிறுவன வளாகத்தில் நடத்துகிறது. இந்த நிகழ்வின்போது, ஜேஇஇ 2024 தேர்வர்கள் இக்கல்வி நிறுவன வளாகத்தைப் பார்வையிடுவதுடன் ஐஐடி மாணவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்ற அனுபவத்தை நேரடியாகப் பெற இக்கல்வி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஐஐடி, ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் ‘செயல் விளக்க நாள்’ நிகழ்வை கல்வி நிறுவன வளாகத்தில் நடத்துகிறது. இந்த நிகழ்வின்போது, ஜேஇஇ 2024 தேர்வர்கள் இக்கல்வி நிறுவன வளாகத்தைப் பார்வையிடுவதுடன் ஐஐடி மாணவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்ற அனுபவத்தை நேரடியாகப் பெறலாம். முன்னணி ஐஐடி நிறுவனங்களில் தேர்வர்களுக்கு இங்கு மட்டும்தான் இப்படி ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
தற்போதைய மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களுடன் கலந்தாலோசிக்கவும், ஆதாரங்களில் இருந்து நேரடியாக உண்மையான, புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. சென்னை ஐஐடி-யின் புதிய துறையான தி வாத்வானி ஸ்கூல் ஆஃப் டேட்டா சயின்ஸ் அண்ட் ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள பிடெக் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வுப் (B.Tech in Artificial Intelligence and Data Analytics) படிப்பு உள்ளிட்ட அண்மையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் மாணவர்கள் தெளிவுபெறலாம்.
என்ஐஆர்எஃப் தரவரிசையில், 2016 முதல் 2023 வரை தொடர்ச்சியாக 8 ஆண்டுகளாக நாட்டின் சிறந்த பொறியியல் கல்வி நிறுவனமாக இடம்பெறுள்ள சென்னை ஐஐடி-ன் சிறப்பு அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
சென்னை ஐஐடி-க்கு வருகை தர முடியாத மாணவ-மாணவிகள் 2024 ஜூன் 17ந் தேதியன்று ஆன்லைன் அமர்வில் கலந்து கொள்ளலாம். இந்நிகழ்வின் போது இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி மற்றும் இதர ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் இந்த வளாகத்தின் கல்வி தொடர்பாகவும், கல்வி சாரா வாழ்க்கை பற்றியும் எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள்.
பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தை சுற்றியுள்ள தேர்வர்கள் 2024 ஜூன் 11 அன்று பெங்களூருவில் உள்ள SD ஆடிட்டோரியம், 2024 ஜூன் 12 அன்று ஹைதராபாத்தில் உள்ள T-Hub ஆகிய இடங்களில் நடைபெறும் செயல்விளக்க நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். மூத்த ஆசிரியர்கள், தற்போதைய மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோரும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்நிகழ்வுகளில் பங்கேற்க குறைந்த எண்ணிக்கையிலான இடங்கள் மட்டுமே இருப்பதால் ஜேஇஇ தேர்வர்கள் உடனடியாக பதிவு செய்யும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.- – www.askiitm.com/demo
இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளவிருக்கும் ஜேஇஇ தேர்வர்களை வரவேற்றுப் பேசிய பேராசிரியர் வி.காமகோடி, “இளம் குழந்தைகள் தங்களது வாழ்க்கைப் பாதையை முடிவு செய்ய இது ஒரு மிகமுக்கிய தருணமாகும். அவர்கள் எல்லாவற்றையும் நன்கு புரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும். இளம் குழந்தைகள் அவ்வாறு முடிவு செய்வதற்கு முன்பே எங்களது வளாகத்தைப் பார்வையிடச் செய்து, பல்வேறு பொறியியல் மற்றும் பிற துறைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பை இந்நிகழ்வின் மூலம் ஐஐடிஎம் வழங்குகிறது” எனத் தெரிவித்தார்.
AskIITM முன்முயற்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் செயல்விளக்க நாள் நிகழ்வை முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள்தான் வடிவமைத்து இயக்கி நடத்தி வருகிறார்கள். இந்நிகழ்வுகள் மட்டுமின்றி இங்குள்ள படிப்புகள், ஆசிரியர்கள், வளாக வாழ்க்கை, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து askiitm.com இணையதளத்தில் தேர்வர்கள் கேள்விகளைக் கேட்கலாம். முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர் தன்னார்வலர்கள் குழுவினர் இவற்றுக்கான விடையளிப்பார்கள். ஏற்கனவே பதிவேற்றப்பட்டுள்ள பதில்களையும் தேர்வர்கள் கண்டறியலாம்.
இவை தவிர, சென்னை ஐஐடி தொடர்பான பல்வேறு தலைப்புகளில் Instagram மற்றும் YouTube ல் 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை ஐஐடி-ல் உள்ள தனித்துவமான கல்விச் சூழலை விளக்கிப் பேசிய சென்னை ஐஐடி டீன் (கல்வி பாடப்பிரிவுகள்) பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ், “விருப்பப் பாடங்கள், தனிப்பாடங்கள், இடைநிலை இரட்டைப் பட்டம் (IDDD) ஆகியவற்றில் உள்ள நெகிழ்வுத் தன்மை பற்றி தேர்வர்கள் மேலும் தகவல்களைக் கேட்டுப் பெறலாம். தங்களுக்கென தனிப்பாதையை அவர்களால் கட்டமைத்துக் கொள்ள முடியும்” எனக் குறிப்பிட்டார்.
சென்னை ஐஐடி-ல் மாணவர்களுக்குக் கிடைக்கும் தனித்துவமான வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்த, சென்னை ஐஐடி முன்னாள் மாணவரான அம்ருதாஷ் மிஸ்ரா இந்த முன்முயற்சி குறித்துக் கூறும்போது, “கல்விமுறை, ஆராய்ச்சி ஆய்வகங்கள், திறன் மேம்பாட்டு கருத்தரங்குகள், தொழில் ஊக்குவிப்புக்கு முந்தைய நிலை, தொழில் ஊக்குவிப்பு போன்றவை சரியாகக் கலந்திருப்பது சென்னையில்தான் என்று கூற முடியும். மாணவர்கள் அதனைப் பார்வையிட்டு நம்பிக்கை கொள்வது அவசியம்” எனத் தெரிவித்தார்.
முக்கிய நாட்கள்
• 11 ஜூன் 2024- பெங்களூருவில் AskIITM செயல்விளக்க நாள்
• 12 ஜூன் 2024 – ஹைதராபாத்தில் AskIITM செயல்விளக்க நாள்
• 15, 16 ஜூன் 2024- சென்னையில் AskIITM செயல்விளக்க நாள்
• 17 ஜூன் 2024- ஆன்லைன் முறையில் AskIITM செயல்விளக்க நாள்
கல்வியில் நெகிழ்வுத்தன்மை: சென்னை ஐஐடி-ன் தற்போதைய கல்வித் திட்டத்தில் விருப்பப் பாடமுறை வாயிலாக மாணவர்களுக்கு தங்களின் படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் மிக உயர்ந்த நெகிழ்வுத் தன்மையை வழங்கி வருகிறது. மாணவர்கள் தங்களின் படிப்புகளில் 40-50% வரை தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம். இதில் வேறெந்தத் துறையில் இருந்தும் தேர்வு செய்யும் வாய்ப்பும் அடங்கும். மாணவர்கள் ‘தனிப்பாடத்திற்கோ’ (Minor) அல்லது இடைநிலை ‘இரட்டைப் பட்டத்துக்கோ (IDDD) மாறிக் கொள்ள முடியும்.
இந்த நெகிழ்வுத்தன்மை காரணமாக ‘பாடப்பிரிவு கிளை மாற்றம்’ என்ற முறையே இனி தேவையில்லை என ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர் ஒருவர் பட்டம்பெற முடிக்க வேண்டிய கிரடிட்-கள் எண்ணிக்கை 432-ல் இருந்து 400-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது கல்வி பணிச்சுமையை ஏறத்தாழ 10 சதவீதம் குறைக்கிறது.
மேம்படுத்தப்பட்ட முதலாமாண்டு அனுபவம்: முதலாமாண்டு மாணவர்களுக்கான பயிலரங்குகள், முன்பெல்லாம் விடுமுறைக் காலங்களில் நடத்தப்பட்டு பின்னர் செமஸ்டரில் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு வந்தது. மேலும் இரண்டு வார விடுமுறை நாட்களும் சேர்க்கப்பட்டது. மேலும், ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை ஊக்குவிக்கும் வகையில், முதலிரண்டு செமஸ்டர்களைப் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கட்டாயப் பொழுதுபோக்கு பாடநெறி (தேர்ச்சி/தோல்வி, 2 கிரடிட்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி எப்போதும் வளமான தொழில் முனைவு சூழலைக் கொண்டிருக்கிறது. இதனை அங்கீகரிக்கும் விதமாக, ஆர்வமுள்ள மாணவர்களுக்கு மூன்றாவது/நான்காவது செமஸ்டர்களில் தொழில் முனைவோர் விருப்பப் பாடங்களை வழங்க இக்கல்வி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
விளையாட்டு ஒதுக்கீடு: சென்னை ஐஐடி இளங்கலைப் பாடத்திட்டங்களில் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கான மாணவர் சேர்க்கையை நாட்டிலேயே முதலாவதாக அறிமுகப்படுத்திய ஐஐடி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இக்கல்வி நிறுவனம் 2024-25 கல்வியாண்டில் இருந்து விளையாட்டுத் தனிச்சிறப்பு மாணவர் சேர்க்கையை (Sports Excellence Admission – SEA) அறிமுகப்படுத்த உள்ளது. இந்த முயற்சியானது விளையாட்டில் சிறந்து விளங்கும் திறமையான மாணவர்களை அங்கீகரித்து வெகுமதி அளிப்பதாகும். இத்திட்டம் தகுதியான மாணவர்களை அவர்களின் விளையாட்டுகளில் தொடர்ந்து சிறந்து விளங்கச் செய்யும் அதே வேளையில் உயர் கல்வியைத் தொடர்வதை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது.
வளாக வேலைவாய்ப்புகள்: கடந்த 2024 ஏப்ரல் 30ந் தேதி நிலவரப்படி, சென்னை ஐஐடி நடப்பாண்டில் பிடெக்/இரட்டைப் பட்டப்படிப்பு மாணவர்களில் 80%க்கு அதிகமாகவும், முதுகலைப் பட்ட மாணவர்களில் 75%க்கும் மேற்பட்டதாகவும் இடம்பிடித்துள்ளது. 2023-24ம் ஆண்டில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வளாக வேலைவாய்ப்புகளில் 256 நிறுவனங்களில் மொத்தம் 1,091 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். கூடுதலாக 300 முன்வேலைவாய்ப்புப் பணிகளில் 235 பேர் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் ஒப்பீடு அளவில் மற்றும் சராசரி சம்பளம் முறையே ரூ.19.6 லட்சமாகவும், ரூ.22 லட்சமாகவும் உள்ளது.
ஜப்பான், ஐரோப்பா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் 44 சர்வதேச வாய்ப்புகளை வழங்கியுள்ளன. மேலும், 85 ஸ்டார்ட்அப்கள் வளாக வேலைவாய்ப்பு முதல் மற்றும் இரண்டாவது கட்டங்களில் 183 வாய்ப்புகளை வழங்கின. இவ்வாறு இடம்பெற்ற மாணவர்களில் 43% பேர் முக்கிய துறைகளிலும், 20% பேர் மென்பொருள் துறையிலும், 10%க்கும் குறைவானவர்கள் பகுப்பாய்வு/நிதி/ஆலோசனை மற்றும் தரவு அறிவியலில் இடம்பெற்றுள்ளனர்.
கல்வி உதவித் தொகைகள் மற்றும் நிதியுதவி: பிடெக் மாணவர்களுக்கு 100% நிதிஆதரவு வழங்கும் வகையில் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ‘ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம்’ பிரிவில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக (2022-23 & 2023-24) நிதியுதவி வழங்க சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களும், பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதி கூட்டாளர்களும் திரண்டுள்ளனர். சென்னை ஐஐடி மாணவர்களுக்காக வழங்கப்படும் மெரிட்-கம்-மீன்ஸ் (MCM) உதவித் தொகை, மத்திய-மாநில அரசுகளால் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஏராளமான நிதியுதவிகளும் அடங்கும். எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோரின் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த ஆதரவின் மூலம் மாணவர்கள் நிதி நிலைமை அல்லது கல்விக் கடன்களைப் பற்றிய கவலையின்றி தங்களின் படிப்பு மற்றும் எதிர்காலக் கல்வி இலக்குகளில் முழுமையாக கவனம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT