Published : 29 May 2024 05:09 AM
Last Updated : 29 May 2024 05:09 AM

எளிய மனிதர்களின் கனவை பூர்த்தி செய்வதே சிவில் இன்ஜினீயரிங் படிப்பு: ‘உயர்வுக்கு உயர் கல்வி’ நிகழ்வில் துறை வல்லுநர்கள் தகவல்

சென்னை: எளிய, சாமானிய மனிதர்களின் கனவைப் பூர்த்தி செய்வதே சிவில் இன்ஜினீயரிங் படிப்பு என்று விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ ஆன்லைன் தொடர் வழிகாட்டி நிகழ்வில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ என்ற நிகழ்ச்சி ஆன்லைன் வழியாக நடைபெற்றது.

இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் கல்லூரி, சவீதா இன்ஜினீயரிங் கல்லூரி, ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்கின. கடந்த சனிக்கிழமை (மே 25) மாலை நடைபெற்ற ஆன்லைன் வழிகாட்டி 14-வது தொடர் நிகழ்வில் ‘சிவில் & ஆர்க்கிடெக்சர் துறையில் உள்ள படிப்புகள் மற்றும் வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் துறைசார் வல்லுநர்கள் பேசியதாவது:

சவீதா இன்ஜினீயரிங் கல்லூரியின் சிவில் இன்ஜினீயரிங் துறைத்தலைவர் எம்.கல்பனா: ஒவ்வொரு எளிய மற்றும் சாமானிய மனிதனின் கனவும், தனக்கென்று ஒரு வீடு இருக்க வேண்டும் என்பதுதான். அப்படியான சாமானிய மனிதனின் கனவைப் பூர்த்தி செய்வதே சிவில் இன்ஜீனியரிங் படிப்பாகும். மக்கள் அனைவரும் வியந்து பார்க்கும் கட்டிடங்கள், பாலங்கள் என அனைத்துமே கட்டிடப் பொறியியல் மற்றும் கட்டிடக் கலை படிப்பால் விளைந்தவையாகும்.

சென்னை சிஎஸ்ஐஆர் - எஸ்இஆர்சி இயக்குநர் டாக்டர் என்.ஆனந்தவள்ளி: சிவில் படிப்பு நம் வாழ்க்கையுடன் தொடர்புடையது. ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவையானது உணவு, உடை, இருப்பிடம் ஆகும். சிவில் இன்ஜினீயரிங் படிப்பின் தேவையையும், முக்கியத்துவத்தையும் இன்னும் அறியாமல் இருப்பவர்களும் உண்டு. சிவில்இன்ஜினீயர்களுக்கான ஆராய்ச்சி மையங்கள் இருப்பதிலிருந்தே இதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

நிகழ்வை ஒருங்கிணைத்த ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு: பொறியியல் துறையின் தாய் பிரிவுகளான மூன்று பிரிவுகளுள் ஒன்று சிவில் இன்ஜினீயரிங். மண் சார்ந்த பணியைச் செய்பவர்கள் விவசாயிகள் மட்டுமில்ல, சிவில் இன்ஜினீயர்களும்தான். திரும்பும் பக்கமெல்லாம் வீடுகள், அடுக்குமாடிகள், பாலங்கள், மெட்ரோ ரயில் பாலங்கள், விமான தளங்கள், பள்ளிகள், மருதுவமனைகள் என எல்லாமும் சிவில் இன்ஜினீயர்களின் மகத்தான பணிகளால்தான் சாத்தியமானது.

இந்த நிகழ்வில் பங்கேற்க தவறியவர்கள் https://www.htamil.org/UUKE14 என்ற லிங்க்-ல் பார்த்து பயனடையலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x